அந்நிய நேரடி முதலீடு 16 சதவீதம் சரிவு

அந்நிய நேரடி முதலீடு 16 சதவீதம் சரிவு
Updated on
1 min read

நாட்டில் அந்நிய நேரடி முதலீடு செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் சரிந்து 245 கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தில் எப்டிஐ 127 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு 291 கோடி டாலராக இருந்தது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் அதிகரித்து 1,447 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் எப்டிஐ அளவு 1,259 கோடி டாலராக இருந்தது.

கடந்த மே மாதத்தில் 360 கோடி டாலரும், ஜூலை மாதத்தில் 350 கோடி டாலரும் அந்நிய நேரடி முதலீடு வந்ததால் நடப்பு நிதி ஆண்டில் முதலீட்டு அளவு அதிகரித்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் அதிகபட்சமாக 246 கோடி டாலரும், சேவைத் துறையில் 122 கோடி டாலரும், மருந்து துறையில் 109 கோடி டாலரும், ஆட்டோமொபைல் துறையில் 103 கோடி டாலரும் முதலீடு செய்யப்டப்டுள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகபட்சமாக மொரீஷியஸிலிருந்து 419 கோடி டாலர் முதலீடு வந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூரில் இருந்து 241 கோடி டாலரும், நெதர்லாந்திலிருந்து 197 கோடி டாலரும், அமெரிக்காவிலிருந்து 119 கோடி டாலரும், ஜப்பானிலிருந்து 93 கோடி டாலரும், இங்கிலாந்திலிருந்து 84 கோடி டாலரும் வந்துள்ளன.

கடந்த நிதி ஆண்டில் (2013-14) இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அந்நிய முதலீடு 2,429 கோடி டாலராகும். அதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2012-13) மேற்கொள்ளப்பட்ட முதலீடு 2,242 கோடி டாலராகும்.

அந்நிய நேரடி முதலீடு குறைவதால் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும். இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர் அந்நிய முதலீடு கட்டமைப்புத் துறைக்கு தேவைப்படுகிறது. துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இத்தொகை தேவைப்படுகிறது.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ராணுவ தளவாட உதிரிபாகங்கள் உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீத அளவுக்கு அரசு தளர்த்தியுள்ளது. இதேபோல காப்பீட்டுத் துறையிலும் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அரசு தளர்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in