Published : 21 Nov 2014 10:51 AM
Last Updated : 21 Nov 2014 10:51 AM

கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைகிறது ஐ.என்.ஜி.வைஸ்யா வங்கி: இரு பங்குகளின் விலையும் 52 வார உச்சத்தை தொட்டன

ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. மும்பை பங்குச்சந்தைக்கு அளித்த செய்திகுறிப்பில் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி இதனை தெரிவித்திருக்கிறது. கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக்கும் இதனை தன்னுடைய ட்விட்டர் மூலம் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். முறையான அனுமதி பெற்ற பிறகு இந்த இணைப்பு இருக்கும், மேலும் பங்குதாரர்கள் நலனுக்கு இணைந்து வேலை செய்வோம் என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த இரண்டு பங்குகளின் விலையும் உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டன. ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி பங்கு 7.84 சதவீதம் உயர்ந்து 816 ரூபாயில் முடிவடைந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 52 வார உச்சபட்ச விலையான 865 ரூபாயை தொட்டது. அதேபோல கோடக் மஹிந்திரா வங்கி பங்கு 7.35 சதவீதம் உயர்ந்து 1156 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 1163 ரூபாயில் முடிவடைந்தது.

பெங்களூருவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கோடக் வங்கியுடன் இணையவிருக்கிறது. இந்த இணைப்பு மூலம், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி. ஆக்ஸிஸ் வங்கி களுக்கு பிறகு நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோடக் வங்கி இருக்கும்.

1000 ஐ.எம்.ஜி வைஸ்யா வங்கிக்கு 725 கோடக் பங்குகள் கிடைக்கும். ஐ.எம்.ஜி வைஸ்யா வங்கியிடம் நாடு முழுக்க 573 கிளைகளும் 635 ஏடிஎம்களும் இருக்கின்றன.

இந்தியன் வைஸ்யா வங்கியை டச்சு நாடு நிறுவனமான ஐஎன்ஜி குழுமம் இணைத்து 2002-ம் ஆண்டு ஐஎன்.ஜி. வைஸ்யா வங்கி உருவானது. இந்திய வங்கி ஒன்று வெளிநாட்டு வங்கியை இணைத்தது அப்போதுதான். இப்போது இந்த வங்கியில் ஐஎன்ஜி குழுமம் வசம் 42.73 சதவீத பங்குகள் இருக்கின்றன.

ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. சைலேந்திர பண்டாரி இயக்குநர் குழு முன்பு தன்னுடைய ராஜி நாமாவை சமர்ப்பித்தார். அவரது ராஜிநாமாவை இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டது. ஆனால் அவர் அடுத்த வருடம் ஜனவரி 31 வரை இந்த பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய துணை சி.இ.ஓ உதய் சரணை சி.இ.ஓவாக இயக்குநர் குழு நியமித்து ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த இணைப்பு குறித்து ஒரு வருடங்களாக அவ்வப்போது செய்திகள் கசிந்து வந்தன.

இதேபோல இந்த வருட ஆரம்பத்தில் டச்சு நிறுவனமான ஐ.என்.ஜி குழுமம், ஐ.என்.ஜி. வைஸ்யா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தன்வசம் இருந்த 26% பங்குகளை எக்ஸைட் நிறுவனத்திடம் விற்றது குறிப்பிடத் தக்கது. மேலும் ஐஎம்ஜி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எக்ஸைட் காப்பீட்டு நிறுவனம் என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x