

அடுத்த மாதம் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோகாம், வோடபோன், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
வோடபோன் நிறுவனம் ரூ.2,800 கோடி ரூபாய்க்கு வங்கிப் பிணை கொடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோகாம் நிறுவனம் தேசிய அளவில் 4 ஜி சேவை அளிப்பதற்காக 2,600 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பிணை கொடுத்திருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 3,700 கோடி ரூபாய் வங்கிப் பிணை கொடுத்திருக்கிறது.
வங்கிப் பிணை கொடுக்கப் பட்டிருக்கும் அளவுக்கு அந்நிறுவனங்கள் ஏலம் எடுக்க வாய்ப்பு உள்ளது..
ஐடியா நிறுவனம் 1,555 கோடி ரூபாய்க்கும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 200 கோடி ரூபாய்க்கும், டாடா டெலி சர்வீசஸ் 130 கோடி ரூபாய்க்கும், டெலிநார் நிறுவனம் ரூ.600 கோடிக்கும், ஏர்செல் நிறுவனம் ரூ.400 கோடிக்கும் வங்கிப் பிணை கொடுத்துள்ளன.
இதனை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய டெலிகாம் நிறுவனம் இந்தியா முழுக்க சேவையைக் கொடுக்க வேண்டும் என்றால் 1918.75 கோடி ரூபாயை பிணையாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு மட்டும் ஸ்பெக்ட்ரம் வேண்டும் என்றால் 438.75 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.