

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களின் விலையை குறைத்திருக்கின்றன.
மாருதி சுசூகி நிறுவனம 8,502 ரூபாய் முதல் 30,984 ரூபாய் வரை விலைக் குறைப்பு செய்திருக்கிறது. மத்திய அரசு குறைத்த வரியை அப்படியே வாடிக்கையாளர்களிடம் வழங்குவதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் 10,000 ரூபாய் முதல் 1,35,300 ரூபாய் வரை விலையைக் குறைத்திருக்கிறது. இந்த விலை தன்னுடைய அனைத்து மாடல் கார்களுக்கும் பொருந்தும் என்றும் ஹூண்டாய் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் கார்களின் விலை குறைந்து வாங்குவது அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய அனைத்து மாடல் கார்களின் விலையையும் ஃபோக்ஸ்வேகன் குறைத் திருக்கிறது. 18,000 ரூபாய் 51,000 ரூபாய் வரை ஃபோக்ஸ்வேகன் கார்களின் மாடல்களை பொறுத்து விலை குறையும்.
இந்த விலைக் குறைப்பு ஆட்டோமொபைல் துறையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று ஃபோக்ஸ்வேகன் நிர்வாக இயக்குநர் அர்விந்த் சக்ஸேனா தெரிவித்தார். ஏற்கெனவே டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலையைக் குறைத்திருக்கின்றன.
நாட்டின் பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வாகனங்கள் 5 சதவீதம்வரை குறைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் அதிகபட்சமாக 4,500 ரூபாய்வரை இந்த நிறுவனத்தின் வாகனங்கள் குறையும் என்று தெரிகிறது.
இரு சக்கர வாகனங்கள், சிறிய கார்களுக்கு 12 சதவீதமாக இருந்த வரியை 8 சதவீதமாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறைத்தார். எஸ்.யூ.வி. வகை வாகனங்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 24 சதவீத மாகவும், நடுத்தர கார்களுக்கு 24 சதவீதத்திலிருந்து 20 சதவீத மாகவும், உயர ரக கார்களுக்கு 27 சதவீதத்திலிருந்து 24 சதவீதமா கவும் வரி குறைக்கப் பட்டது.