

திவால் சட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதையொட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உயர்நிலை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கடனை திரும்பப் பெறுவதற் கான நடைமுறைகளை விரைவாக வும் உறுதியாகவும் எடுப்பதற்கு திவால் சட்டத்தை நடைமுறைப் படுத்த அரசு தீவிரம் காட்டுகிறது.
திவால் சட்டம் 2016, கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் நலிவடைந்த நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு 180 நாட்களுக்குள் தீர்வு காண முடியும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் திவாலாவதைத் தடுக்க முடியும். கடன் கொடுத்தவர்களுக்கும், கடன் வாங்கிய நிறுவனங்களுக்கும் இடையே சுமுகத் தீர்வை எட்டுவதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும்.
திவால் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை, மத்திய நிதிச் சேவைகள் துறை, மத்திய நிறுவன விவாகாரங்கள் துறை அதிகாரிகளுடன் ஜேட்லி ஆலோசனை நடத்தினார்.
திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்த எங்களுக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. இந்த சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த செயல்திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் விவாதித்தோம் என்று மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சேவைத்துறை வளர்ச்சியில் கல்வி
சேவைத்துறை வளர்ச்சி யடைவதற்கு கல்வி மிகப் பெரிய பங்களிப்பு செய்து வருகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவேகானந்தா தொழில்சார் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவை பொருத்தவரை கல்வி என்பது மிகப்பெரிய ஆற்றல் வளம். ஏனெனில் நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு கல்வி மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது என்றார். குறிப்பாக சேவைத்துறை வளர்ச்சியில் கல்வி மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மனிதவளமும் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றுகிறது. சில வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது என்பதை சுட்டிக் காட்டிய அருண் ஜேட்லி மனித வளம் என்பது உலக வர்த்தக பேச்சுவார்த்தையில் மிக முக்கியமானது என்று கூறினார்.
சேவைத்துறை நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 60 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது.