Last Updated : 28 Sep, 2016 10:35 AM

 

Published : 28 Sep 2016 10:35 AM
Last Updated : 28 Sep 2016 10:35 AM

விரைவில் மண்டலங்களிடையே விமான போக்குவரத்து சேவை: அமைச்சர் கஜபதி ராஜு தகவல்

பிராந்திய விமான போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

விமானங்கள் மூலம் பிராந்தியங் களிடையேயான இணைப்பு சேவையைத் (ஆர்சிஎஸ்) தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. குறைந்த விமான கட்டணத்தில் இத்தகைய சேவையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான விமான பயணத்துக்கு ரூ. 2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சேவை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ தொடங்கப்படும் என்று அவர் கூறினார். இத்தகைய சேவை மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து பயணிகள் பயன்பாட்டில் 20 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் இது தொடர்பான விமான போக்குவரத்து கொள்கையை அமைச்சகம் வெளி யிட்டது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களுடன் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. குஜராத், மஹாராஷ்டிரம், சத்தீஸ் கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிராந்தியங்களுக்கிடையிலான விமான சேவை என்பது இரண்டு விமான நிலையங்களுக்கிடையே சேவை அளிப்பதாகும். இதில் ஒரு விமான நிலையத்தை மத்திய அரசு தேர்வு செய்யும். மற்றொன்றை மாநில அரசு தேர்வு செய்யலாம்.

கடந்த வாரத்தில் இந்திய விமான ஆணையம் (ஏஏஐ) பயன் பாட்டில் இல்லாத 20 விமான நிலையங்களைக் கண்டறிந்து அவற்றில் விமான சேவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

ஆர்சிஎஸ் திட்டத்தில் விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு சாத்தியக்கூறு நிதி இடைவெளியை அதற்கான நிதியம் (விஜிஎப்) மூலம் அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அந்த விமானங்களுக்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வசதி உள்ளிட்டவற்றை இலவசமாக அளிக்க வேண்டும்.

விஜிஎப் நிதியமானது ஒவ்வொரு உள்நாட்டு விமான சேவைக்கும் குறைந்த அளவு வரி விதிப்பு மூலம் உருவாக்கப்படும். இது சில குறிப்பிட்ட மார்க்கத்தில் இயக்கப்படும் விமானங்களுக்கு, அதிலும் 80 இருக்கைகளுக்குக் குறைவான எண்ணிக்கையிலான விமானங்களுக்கு மட்டும் வசூலிக்கப்படும். இந்த விஜிஎப் நிதியை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்.

விமான நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் விமான எரிபொருளுக்கு 2 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுவதாக கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இது புதிய விமான கொள்கையின்படி விதிக்கப்பட்டதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x