Last Updated : 24 Mar, 2014 10:01 PM

Published : 24 Mar 2014 10:01 PM
Last Updated : 24 Mar 2014 10:01 PM

வணிக நூலகம்: மனமே மனமே நீ மாறிவிடு!

அதிகம் விற்கின்ற பிஸினஸ் புத்தகங்களுக்கு என்று சில லட்சணங்கள் உண்டு. எல்லா புத்தகக் கடைகளிலும் பிரதானமாய் கண்ணில் படும். எல்லா கார்ப்பரேட் ஆசாமிகளும் தவறாமல் இதுபற்றி பேசுவார்கள். மொழி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எல்லா கம்பெனி நூலகங்களிலும் தவறாமல் கிடைக்கும். “என்ன தான் இது?” என்கிற ஆர்வம் படிக்காதவர் மத்தியிலும் இருக்கும்.

இவை அனைத்தும் Who Moved My Cheese? An Amazing Way to Deal with Change in Your Work and in Your Life புத்தகத்திற்கு பொருந்தும்.

1998-ல் வெளியான இந்த புத்தகம் அமெரிக்காவில் சுமார் 5 ஆண்டுகள் டாப் 5 புத்தகங்களில் ஒன்றாக விற்கப்பட்டது. பின்னர் உலகெங்கும் இதுவரை 37 மொழிகளில் இரண்டரை கோடி புத்தகங்கள் விற்று சாதனை புரிந்துள்ளது. டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் இந்த புத்தகம் எழுதி கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நிலையை எட்டிப்பிடித்தார் என்றால் அது மிகையில்லை.

ஒரு புத்தகத்தை எப்படியெல்லாம், எங்கெல்லாம் விற்க முடியும் என்கிற சூட்சமம் அமெரிக்கர்களுக்கு எல்லா காலங்களிலும் தெரிந்திருக்கிறது. மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு நிறுவ னமும் தன் பணியாளர்களுக்கு இதை அளிப்பது அவசியம் என்கிற ரீதியில் உலகம் எங்கும் விற்றிருக்கிறார்கள்.

மாறுதல் வேண்டும் என்பதை பொதுவாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மாற்றத்தை நிகழ்த்தும் முழு மனமும், துணிவும், திறனும் தான் எங்குமே பற்றாக்குறை. மாற்றத்தை மறுக்கும் மனோபாவத்திலிருந்து மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இந்தப் புத்தகம்.

சின்ன சைஸில் 94 பக்கங்கள் தான். இரண்டு எலி, இரண்டு மினி சைஸ் மனிதர்கள், இவர்கள் தேடும் பாலாடைக் கட்டி. இவ்வளவுதான் கதைக்களம். பாலாடைக் கட்டி தீருவதை கவனிக்காதபோது திடீரென்று தீர்ந்ததாக ஸ்தம்பித்து நிற்பதும் பின்னர் மன மாற்றத்திற்குப் பிறகு புது பாலாடைக் கட்டியை எதிர் நோக்குவதுமாய் செல்லும் சின்ன கதை. மனிதர்களைவிட எலிகள் விரைவில் மாற்றத்தை புரிந்து கொள்கின்றன. தான் கற்ற விஷயத்தை சுவரில் எழுதி வைக்கின்றன. அதை நாம் படித்து,” அட, ஆமாம்..!” என்று ஆச்சரியப்படுகிறோம்.

சுருக்கமாகச் சொன்னால் மாற்ற நிர்வாகத்தை இதைவிட எளிமையாக, வலிமையாக எடுத்துச் சொல்ல முடியாது எனலாம். இன்றும் பல நிறுவனங்கள் இந்தப் புத்தகத்தை பயிற்சி நூலுடன் பணியாளர்களுக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் இவ்வளவு ஹிட் அடிக்க என்ன காரணம் என்று யோசித்திருக்கிறேன். மீண்டும் இதை படிக்கையில் எனக்கு துரித உணவு உண்பதைப் போன்ற உணர்வுதான் மேலோங்கியது. ஒருவித தட்டைத் தன்மையும், ஆழமின்மையும், அவசரமாக பொதுமைப்படுத்துதலும் சட்டென்று ஒரு வெறுப்பைக் கூட உண்டு பண்ணியது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய என் சகாக்கள் பலருடன் பேசினேன். எல்லாரும் ஒரு மனதாக சிலாகித்தார்கள்.

“முழுசா படிச்ச ஒரே புத்தகம்!” என்று சொன்னார் ஒருவர். அதிகம் விலை கொடுத்து வாங்கிய புத்தகம் படிக்காதபோது ஏற்படும் குற்ற உணர்விலிருந்து தப்பினேன் என்றார். மிகச்சிறிய நேரத்தில் சுலபமாக எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசரத்தில் உள்ள இந்த தலைமுறைக்கு இந்த புத்தகம் தீனி போடுகிறது என்பது தான் வெற்றி சூட்சமமோ?

சாரம்சமாக எலிகள் நமக்குச் சொல்பவை இவைகளைத் தாம்:

மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கும். என்னென்ன மாறுதல்கள் வரும் என கண்காணித்துக் கொண்டே இருங்கள். மாற்றத்தை காலதாமதமின்றி ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி. மாற்றத்தை ரசியுங்கள். இந்த மாற்றமும் மாறும். மீண்டும் மீண்டும் மாறத் தயாராகுங்கள். மாற்றத்தை ரசித்தவாறு வாழுங்கள் என்றென்றும்!

பாலாடை என்பது குறியீடு. நம் வாழ்க்கையில் நாம் துரத்தும் வெற்றியும் சந்தோஷமும்தான் பாலாடைக் கட்டிகள். எதை சந்தோஷம் என்றும் வெற்றி என்றும் நினைத்து செய்து கொண்டிருக்கிறோமோ அவை மாறிக்கொண்டே வருகின்றன. திடீர் மாற்றம் வாழ்க்கையை நிலை குலைய வைக்கிறது. எது நமக்கு நடக்காது என்று நினைக்கிறோமோ அது நமக்கு நடக்கும்போது மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

மறுப்பும், கோபமும், செயலற்று கிடப்பதும் நம் தடுப்பு நடவடிக்கைகளாய் கொள்கிறோம். அவை எந்தவிதத்திலும் பலன் அளிக்காது என்று காலம் புரிய வைக்கிறது. இந்த பரிவர்த்தனை தத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போது, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனதுக்கு வருகிறது.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வணிகர்களுக்கு நிரம்ப தேவைப்படும். தேர்தல் முடிவு, சட்ட சீர்திருத்தம், போட்டியாளர் தந்திரம், சந்தை மாற்றம், இயற்கை கொந்தளிப்பு, முக்கிய பணியாளர் விலகல்.. என எந்த ஒரு சிறு மாறுதலும் கூட உங்கள் வியாபாரத்தை புரட்டிப் போடலாம். அடுத்த மாறுதலை எதிர் நோக்கி தேடி அணைத்து ஏற்றுக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.

ஒவ்வொரு வியாபாரமும் ஒரு இக்கட்டில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் ஒவ்வொரு பெரும் சந்தை தேக்கத்தின் போதும் பல புதிய தொழில்கள் பிறக்கின்றன.

உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்க்கையில் கடந்த 10 ஆண்டுகளில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன? அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கலாம் என்று யோசியுங்கள். இதை யோசிக்க இப்புத்தகம் உதவும்.

“எங்கே வாழ்க்கை தொடங்கும்?

- அது எங்கே எவ்விதம் முடியும்?

இது தான் பாதை ; இது தான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது.

பாதையெல்லாம் மாறி விடும்;

பயணம் முடிந்துவிடும்.

மாறுவதைப் புரிந்து கொண்டால்

மயக்கம் தெளிந்து விடும்!”

அன்று இயல்பாக சொன்ன இந்த கண்ணதாசன் பாடலின் சாரத்தை இன்று வியாபார புதினமாகப் படிப்பதும் காலத்தின் மாற்றத்தில்தானோ?

gemba.karthikeyan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x