அவுட்சோர்சிங் செய்வதற்கு எதிரான மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

அவுட்சோர்சிங் செய்வதற்கு எதிரான மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
Updated on
1 min read

அமெரிக்க கால் சென்டர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அவுட்சோர்சிங் செய்வதற்கு எதிரான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க கால் சென்டர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அவுட்சோர்சிங் செய்தால் அந்த நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறவோ அல்லது நிதி பெறவோ தகுதி இல்லை என்று அந்த மசோதா முன்வரைவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை ஜனநாயக கட்சியை சார்ந்த உறுப்பினர் ஜீன் கிரீன் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டேவிட் மெக்கன்லி இருவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பெரும்பாலும் அமெரிக்க கால் சென்டர் நிறுவனங்கள் தங்களது பணித்திட்டங்களை வெளிநாடுகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இது போன்று வேலைவாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு அரசாங்க கடன் மற்றும் நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும். இந்த கால் சென்டர் நிறுவனங்கள் தங்களது சேவையை உள்நாட்டிலிருந்தே வழங்க வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்ற சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்த மசோதாவில் கால்சென்டர் நிறுவனங்கள் சேவை எங்கிருந்து வழங்கப்படுகிறது என்பதை நுகர்வோர்களுக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு கால்சென்டருக்கு மாற்றி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

``கிரேட்டர் ஹூஸ்டன் பகுதியில் மட்டும் 54,000 கால்சென்டர் வேலைவாய்ப்புகள் உள்ளன. நாடு முழுவதும் 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் முக்கியம் என்னவென்றால் அமெரிக்க ஊழியர்களுக்கு சேவைத்துறையில் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல ஊதியமும் கிடைத்திட செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கால்சென்டர் வேலைவாய்ப்புகள் இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டது. இந்த மசோதா அமெரிக்காவில் உள்ள கால்சென்டர் ஊழியர்களை பாதுகாக்கும் விதமாகவும் அமெரிக்க நுகர்வோர்களுக்கு தேவையில்லாத சேவைகளை வழங்குவதைத் தடுக்கும் விதமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்று ஜீன் கிரீன் தெரிவித்துள்ளார்.

`` வரி செலுத்துவோர் மூலமாக திரட்டப்படும் தொகை பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தை பொறுத்தவரை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் பாதுகாக்கவும் வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும்’’ என்று மெக்கன்லி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in