

Angel என்ற புதிய தொழில் முதலீட்டாளர்கள்
எல்லா நாடுகளிலும் சிறு தொழில்கள் தான் அதிக அளவு வேலை வாய்ப்பையும் உற்பத்தியையும் செய்கின்றன. சிறு தொழில்களின் வளர்ச்சி நாட்டு பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியம். பல சிறு தொழில்கள் முதலீடு பற்றாக்குறையால் மூடப்படுவதும் வழக்கமாகி வருகிறது.
சொந்த பணம், கடன் இவை மட்டுமே சிறு தொழில் முதலீட்டிற்கான வழிகள். கடன் பெற்று முதலீடு செய்வதால், வட்டி நீங்கலான லாபத்தை பார்ப்பது கடினம். வங்கிகள் மூலம் கடன் கிடைக்காதபோது, மற்ற கடன்கள் மீதான வட்டி தொழிலையே குலைத்துவிடும் அபாயம் உள்ளது.
நீங்கள் சிறந்த தொழில் முனைவராக இருந்தால் ஏஞ்சல் (Angel) என்ற முதலீட்டார்கள் மூலம் தேவையான முதலீடு கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஏஞ்சல் என்பவர்கள் மிகப் பெரிய செல்வம் உள்ளவர்கள், அவர்களே தொழில் முனைவர்களாகவும் இருப்பார்.
புதிய தொழிலில் பங்குதாரர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள். ஏஞ்சல்கள் சரியான ரிஸ்க் எடுத்து தொழிலின் துவக்கத்தில் முதலீடு செய்து, அத்தொழில் நிலையாக வளரும்போது பெரிய லாபம் பார்க்க நினைப்பவர்கள். ஒரு வென்ச்சர் கேபிடல் (venture capital) செய்யும் முதலீட்டை விட ஏஞ்சல் குறைவான முதலீட்டை செய்வர்.
பொதுவாக 20% -க்கும் அதிகமாக வருவாய் தரும் தொழில்களில் ஏஞ்சல் முதலீடு செய்வர். இவ்வாறான முதலீடு அவரின் கண்பார்வையில் உள்ள அளவில் அவர் ஊரிலேயே முதலீடுகளை செய்வார். ஏஞ்சல் முதலீட்டாளர்கள் அவர்கள் ஏற்கெனவே செய்யும் தொழில் துறையிலேயே முதலீடுகளை செய்வர்.
எனவே ஏஞ்சல் முதலீட்டர்களை நீங்கள் உங்கள் ஊரிலேயே தேடுங்கள், அவர்கள் ஏற்கெனவே உங்கள் துறையில் உள்ள மற்ற தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம்.
அவ்வாறு உள்ள ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உங்கள் தொழிலின் நெளிவு சுளிவுகள் தெரிந்ததினால், உங்களுக்கு பல வகையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியும். உங்கள் தொழில் முனைவு அவர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
உங்கள் தொழில் சிந்தனை, உங்களுடன் தொழில் செய்ய உள்ள பங்குதார்கள், உங்கள் தொழிலுக்கு துணையாக உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் என பலரின் திறமைகளை ஆராய்ந்த பிறகே ஏஞ்சல் உங்கள் தொழிலில் முதலீடு செய்ய முன்வருவார்.