

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கிடையிலான வியாபார போட்டியை ஒழுங்குபடுத்தும் ஆணையம் (சிசிஐ) இந்த அபராதத் தொகையை விதித்துள்ளது. சுரங்கத் தொழிலில் கோல் இந்தியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் வாடிக்கையாளர் தாக்கல் செய்த புகார்களை விசாரித்த சிசிஐ, அதனடிப்படையில் இந்த அபராதத் தொகையை விதித்துள்ளது. முதலாவதாக மகாராஷ்டிர மின்னுற்பத்தி நிறுவனம் (மகாஜென்கோ), கோல் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான புகாரை பதிவு செய்திருந்தது. இத்துடன் கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி நிலக்கரிச் சுரங்கம் மற்றும் வெஸ்டர்ன் நிலக்கரி சுரங்கம் ஆகியன ஆதிக்கம் செலுத்துவதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சந்தையில் தாங்கள் முதலிடத்தில் இருப்பதால் தரம் குறைந்த நிலக்கரியை சப்ளை செய்ததாக மகாஜென்கோ நிறுவனம் புகார் செய்திருந்தது. தரம் குறைந்த நிலக்கரிக்கும் அதிக விலை நிர்ணயம் செய்தது. நிலக்கரி சப்ளை செய்வது தொடர்பாக எவ்விதமான வெளிப்படையான ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதில் தரம் மற்றும் விநியோகம் சார்ந்த எவ்வித நிபந்தனைகளும் போடப்படவில்லை என்றும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அடுத்ததாக குஜராத் மாநில மின் வாரியம் புகார் செய்திருந்தது.
மேலும், எரிபொருள் (நிலக்கரி) சப்ளை தொடர்பாக போடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து மின்னுற்பத்தியாளர் சங்கம் (ஏபிபி) கேள்வியெழுப்பியுள்ளது. தனியார் மின்னுற்பத்தியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் எப்படி போடப்பட்டுள்ளன என்றும் கேட்டுள்ளது.
இது தவிர, நிறுவனங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்வதை நிறுத்தும் முடிவை கோல் இந்தியா நிறுவனம் தன்னிச்சையாக எடுப்பது குறித்தும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தன.
மேலும் காப்புத் தொகை வசூலிக்க வேண்டும் என்றும் இதுபோன்று நிறுவனங்கள் எழுப்பும் சர்ச்சைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இவற்றை விசாரித்த சிசிஐ, இதில் உள்ள உண்மையைக் கருத்தில் கொண்டு கோல் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதித்ததாகத் தெரிகிறது. இந்தியாவில் மொத்தம் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி அளவு 53 கோடி டன்னாகும். இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.