Last Updated : 05 Jul, 2016 10:17 AM

 

Published : 05 Jul 2016 10:17 AM
Last Updated : 05 Jul 2016 10:17 AM

`இந்திரதனுஷ்’ திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகளில் அரசு விரைவில் முதலீடு

பொதுத்துறை வங்கிகள் மூல தனத்தை அதிகரித்துக் கொள்ள வசதியாக அரசு முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. எந்தெந்த வங்கி களில் எவ்வளவு தொகை முதலீடு செய்வது என்பதை நிதி அமைச்சகம் இறுதி செய்து விட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த முதலீட்டு நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது.

பொதுத்துறை வங்கிகள் நான் காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு தங்கள் வங்கிக்கு எவ்வளவு முதலீடு தேவை என்பதற்கான விரிவான அறிக்கை யை தாக்கல் செய்துள்ளது. வாராக் கடன், திரும்பாக் கடன், வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு வங்கிகளுக்கு எவ்வளவு தொகை முதல் கட்டமாக அளிக்கலாம் என்பதை நிதி சேவைத் துறை இறுதி செய்துள்ளது.

முதல் தவணையாக ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை வங்கிகளுக்கு அரசு விடுவிக்கும் என தெரிகிறது.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் வங்கிகளுக்கு தேவைப்பட்டால் அரசு கூடுதல் நிதி ஒதுக்கத் தயங்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு வங்கிகள் சீரமைப்புக்கு ரூ.70 ஆயிரம் கோடி தொகை இந்திர தனுஷ் என்ற புதிய திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகையானது நான்கு ஆண்டு காலத்தில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்பட்டால் பேசல்-3 விதியை எட்டுவதற்கு வெளிச் சந்தையில் ரூ.1.10 லட்சம் கோடி வரை நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப் படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்திர தனுஷ் திட்டத்தின்படி நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு கிடைக் கும். இது தவிர 2017-18 மற்றும் 2018-19-ம் நிதி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

கடந்த நிதி ஆண்டில் 21 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அதிகபட்சமாக ரூ.5,393 கோடி கிடைத்தது. இதற்கு அடுத்த படியாக பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2,455 கோடி ஒதுக்கப்பட்டது.

இது தவிர ஐடிபிஐ வங்கிக்கு ரூ.2,229 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) ரூ.2,009 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 1,732 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x