Last Updated : 02 Mar, 2017 10:34 AM

 

Published : 02 Mar 2017 10:34 AM
Last Updated : 02 Mar 2017 10:34 AM

ராணுவ தளவாட உற்பத்திக்கு தேவையான உயர் நைட்ரஜன் உருக்கு தயாரிப்பு: ஜிண்டால், டிஆர்டிஓ ஒப்பந்தம்

ராணுவத்துக்குத் தேவையான கருவிகள் தயாரிப்புக்குத் தேவையான உயர் உருக்கு தகடுகளைத் தயாரிக்க ஜிண்டால் ஸ்டீல் ஹிஸார் லிமிடெட் (ஜேஎஸ்ஹெச்எல்) முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (டிஆர்டிஓ) உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நைட்ரஜன் உருக்கை ஜிண்டால் நிறுவனம் தயாரிக்கிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே முன்னிலையில் கையெழுத்தானது.

நைட்ரஜன் உருக்கை உபயோகிப்பதன் மூலம் ஏற்கெனவே ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி உருக்கு (ஆர்ஹெச்ஏ) தவிர்க்கப்படும். இதனால் அந்நியச் செலாவணி மீதமாகும். அத்துடன் உற்பத்திச் செலவு 50 சதவீதம் குறையும் என்று அமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.

நைட்ரஜன் உருக்கு உபயோகமானது ராணுவ தளவாட உற்பத்தியில் மிகவும் முன்னோடி தொழில்நுட்பமாகும். இதன் மூலம் உள்நாட்டில் ராணுவ தளவாடங்களை தயாரிக்க முடியும். இது பிரதமர் நரேந்திர மோடியின் `மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்த உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

நைட்ரஜன் உருக்கு உற்பத்தியானது ஜேஎஸ்ஹெச்எல் மற்றும் பாதுகாப்பு உலோக ஆராய்ச்சி ஆய்வகமும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவு என்று சுட்டிக் காட்டிய அவர் இதன் மூலம்

ராணுவ தளவாட உற்பத்தியில் சுய சார்பு நிலையை எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உயர் நைட்ரஜன் உருக்கை (ஹெச்என்எஸ்) தயாரிப்பதற்காக டிஆர்டிஓ-வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக ஜிண்டால் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கான உருக்கை தயாரிக்கும் முதலாவது இந்திய நிறுவனம் என்ற பெருமையும் தங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

உயர் நைட்ரஜன் உருக்கு துருப்பிடிக்காத தன்மை கொண்டது. மேலும் வெடி பாதுகாப்புக்கு இதை பயன்படுத்த முடியும். இதுஇலகுவானதாக இருந்தாலும் உறுதியான தன்மை கொண்டது. இது நீண்ட காலம் உழைக்கக் கூடியது. இதனால் இத்தகைய உருக்கைக் கொண்டு தயாரிக்கப்படும் வாகனங்களின் எடை குறையும். அதேசமயம் அதன் கவசமானது எத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வலுவுடன் திகழும். எடை குறைவால் வாகனத்தின் எரிபொருள் செலவு குறையும் என்று ஜிண்டால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உருக்கை கவச வாகனங்கள், இலகு ரக தாக்குதல் வாகனங்கள், பன்னோக்கு வாகனங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x