Last Updated : 22 Sep, 2013 04:09 PM

 

Published : 22 Sep 2013 04:09 PM
Last Updated : 22 Sep 2013 04:09 PM

ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு குறைவது தற்காலிக நிகழ்வே

தற்போது 100 பில்லியன் டாலர்களாக இருக்கும் இந்திய ஐ.டி. துறை 2020-ம் ஆண்டு 300 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவர் மற்றும் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் சி.இ.ஓ.வான கிருஷ்ணகுமார் நடராஜனிடம் நேர்காணலுக்காக தொடர்பு கொண்டோம். பேட்டியை தொடங்கும் முன் 'தி இந்து' தமிழ் நாளிதழுக்குத் தனது வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு பேட்டியளித்தார். இனி பேட்டியிலிருந்து...

ஐ.டி. துறையில் என்னதான் நடக்கிறது. 11 சத விகிதம் முதல் 14 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று நாஸ்காம் சொல்லுகிறது. சில புரோக்கிங் நிறுவனங்கள் 16 முதல் 18 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று சொல்லுகிறார்கள். இந்த வருடத்தின் வளர்ச்சி என்னவாக இருக்கும்?

கடந்த நிதி ஆண்டு (2012-13) இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு (ஐ.டி.) கொஞ்சம் சிரமமான காலமாகவே இருந்தது. அமெரிக்காவில் பிரச்னை, ஐரோப்பிய யூனியனில் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்தன. அதனால் கடந்த நிதி ஆண்டு 10.2 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எட்ட முடிந்தது. ஆனால் இந்த வருடம் சர்வதேச சூழ்நிலைகள் மாறிவருகிறது. பல முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக வந்துகொண்டிருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் ஆறுமாதம் முடிந்தபிறகு அக்டோபர் மாத வாக்கில் எங்களுடைய (நாஸ்காம்) எதிர்ப்பார்பை வெளியிடுவோம். இருந்தாலும் இப்போதைய நிலைமையில் கருத்து சொல்வது கொஞ்சம் கடினம். இருந்தாலும், கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டு வளர்ச்சி 13 சதவிகிதம் முதல்14 சதவிகிதம் வரை இருக்கும்.

ரூபாய் மதிப்பு சரிவதால்தான் ஐ.டி. நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறதே?

ரூபாய் மதிப்பு சரிவதால் சிறிதளவு லாபம் கிடைத்தாலும், ரூபாய் சரிவினால் பெரிய மாற்றங்கள் ஏதும் ஐ.டி. துறையில் நிகழவில்லை. பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு முன்பே “ஹெட்ஜிங்” செய்துவிடுகின்றன. மேலும் எங்களுக்கு 100 டாலர் கிடைக்கிறது என்றால் சுமார் 50 டாலரை எந்த நாட்டில் வாங்குகிறோமோ அங்கேயே செலவு செய்ய நேரிடுகிறது. சுமார் 25 டாலரை ஹெட்ஜிங் செய்துவிடுகிறோம். மீதம் இருப்பது 25 டாலர்தான். இதனால் ரூபாய் சரிவினால்தான் ஐ.டி. வளர்ச்சி என்பது கிடையாது. நாங்கள் சொல்லும் வளர்ச்சி விகிதங்கள் எல்லாமே டாலர் கணக்கில்தான்.

ஐ.டி. துறையை நம்பி நிறைய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறதே!

சென்ற வருடம் நிறைய மாணவர்களை வேலைக்கு எடுப்பதாக நிறுவனங்கள் சொல்லி இருந்தன. ஆனால் சர்வதேச சூழ்நிலைகள் சரி இல்லாததால் அவர்களை அப்போதைக்கு எடுக்க முடியவில்லை. அதனால் அவர்களை இந்த வருடம் வேலைக்கு எடுத்திருக்கிறோம். இதனால்தான் இந்த வருட வேலை வாய்ப்பு குறைந்திருக்கிறது. இது ஒரு தாற்காலிக நிகழ்வுதான். வரும் காலத்தில் நிலைமைகள் மாறும். மேலும் ஐ.டி. துறைக்கு வரும் ஒரு நபரால் கூடுதலாக 3 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுக்கிறது. ஐ.டி. துறையில் நேரடியாக 32 லட்சம் பேர் பணி புரிகிறார்கள் என்றால் கூடுதலாக 96 லட்சம் பேர் இவர்களுக்காக வேலை செய்கிறார்கள். மொத்தமாக ஐ.டி. துறையை நம்பி ஒரு கோடியே 30 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப அறிவும், ஆங்கிலமும் தெரிந்த நபர்கள் இருப்பதுதான் நம்முடைய பலம். ஆனால் இப்போது பல நாடுகள் நம்முடன் போட்டி போகிறார்களே?

சரிதான். ஆனாலும் எண்ணிக்கையில் நாம் அதிகம் இருக்கிறோம். உதாரணத்துக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பொறியாளர்கள் வெளியே வருகிறார்கள். ஆனால் வியத்நாமில் சுமார் 50,000 பொறியாளார்கள்தான். இது ஒரு உதாரணம்தான். நமக்கான இடம் இருக்கிறது.

சரிதான். ஆனால் உலக ஐ.டி.துறையில் இந்தியாவின் பங்கு சுமார் சுமார் 6 சதவிகிதம்தானே. இது போதுமா?

இந்த ஆறு சதவிகிதத்தை 12 சதவிகிதமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதை எட்டும்போது பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும். தவிர, உலகளவில் “அவுட்சோர்சிங்” செய்யப்படும் பணிகளில் 50 சதவிகிதம் இந்தியாவுக்குத்தான் வருகிறது. இப்போது 100 பில்லியன் டாலர்களாக இருக்கும் இந்திய ஐ.டி. துறை வருமானம் 2020-ம் ஆண்டு 300 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஐ.டி. துறை என்றாலே அமெரிக்காவும், வங்கி மற்றும் நிதிசார்ந்த பணிகள்(பி.எஃப்.எஸ்.ஐ மட்டுமே நினைவில் வருகிறதே ஏன்?.)

சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. அரசாங்க திட்டங்கள், சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளிலும் ஐ.டி. துறை விரிந்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் பங்கு சில வருடங்களுக்கு முன்பு 66 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது 60 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. அதேபோல ஐரோப்பாவின் பங்கும் 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

“நாஸ்காம் 10000 ஸ்டார்ட் அப்ஸ்” எப்படி போய்க் கொண்டிருக்கிறது.?

“சோசியல்மொபைல், அனலடிக், கிளவுட்” என தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிற நிலையில் இந்த வேலையை சிறிய நிறுவனங்கள்தான் செய்ய முடியும். அதனால் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க நினைத்தோம் அதற்காகதான் இதை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் 4000 நபர்கள் விண்ணப்பித்தார்கள். இதில் பல கட்ட வடிகட்டலுக்கு பிறகு 76 பேரைத் தேர்வு செய்தோம். இவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் ஆலோசகர்கள் உள்ளிட்டோரைக் கொடுத்திருக்கிறோம். மேலும் 'ரெடி ஆஃபிஸ்” என்ற திட்டத்தை நாஸ்காம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தத் திட்டத்தில் வேலை செய்ய அலுவலகம் தயாராக இருக்கும். குறிப்பிட்ட வாடகையை நாஸ்காமுக்கு செலுத்தி தொழில் முனைவோர் தங்களது நிறுவனத்தை ஆரம்பிக்கலாம். ஆரம்பகட்ட தொழில்முனைவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐ.டி.துறைக்கு எதிராக அமெரிக்க அரசு சட்டம், அதற்கு நாஸ்காம் 'லாபி' என்பது போன்ற செய்திகள் வருகிறதே?

தற்போது இருக்கும் ஹெச்.1.பி விசா சட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்து அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்படி குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்பது போன்ற கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்த பிறகுதான் அமலாகும் என்று நாஸ்காம் நம்புகிறது.

நாஸ்காம் தலைமையில் விரைவில் மாற்றங்கள் வரப்போகிறதே. அதைபற்றி?

ஆம், சோம் மித்தலுக்குப் பிறகு சந்திரசேகர் பொறுப்புக்கு வருகிறார். சோம் மித்தல் காலத்தில்தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ், உலக பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகள் வந்தன. இவற்றை மிகத் திறமையாகக் கையாண்டார். புதிதாக பொறுப்பேற்கும் சந்திரசேகரும் இந்த துறையில் சிறந்த அனுபவம் மிக்கவர். இவர் ஆந்திரத்தில் ஐ.டி. துறை செயலாளாராக இருந்த போதுதான், அங்கு இ-காமர்ஸ் மிக சிறப்பாக நடந்தது. இங்கும் சிறப்பாக பணியாற்றுவார் என்று நினைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு உங்களது நிறுவனத்தில் (மைன்ட்ரீ) இருந்து அசோக் சூடா விலகினார். இப்போது அஞ்சன் லஹரி விலகி இருக்கிறாரே?

எங்கள் நிறுவனத்திலிருந்து இருவர் மட்டும்தானே விலகி இருக்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நாங்கள் 14 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வேலை செய்தோமே, அது உங்களுக்கு தெரியவில்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x