Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

போயிங் விமானங்கள் விற்க ஆர்வம், முதலீடு செய்ய தயக்கம்: அமெரிக்க நிறுவனங்கள் மீது சிபல் தாக்கு

அமெரிக்க நிறுவனங்கள் தங்களது போயிங் விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்தியாவில் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டுகின்றன. இது தவறான போக்கு என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கடுமையாக சாடினார்.

டெல்லியில் இந்திய-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியது :

அமெரிக்க நிறுவனங்கள் இந்திய உற்பத்தித் துறையில் முதலீடு செய்தால் இறக்குமதி குறையும். மேலும் அனைத்து தொழில்நுட்பத் தேவைகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது படிப்படியாகக் குறையும்.

ஆனால் அமெரிக்க நிறுவனங்களோ போயிங் விமானங்கள் மற்றும் ராணுவத்துக்குத் தேவையான தளவாட கருவிகளை விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. மின்னணு பொருள் உற்பத்தித் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் ஒத்துழைப்பு செய்து முதலீடு செய்தால் பிற நாடுகளை சார்ந்திருப்பது குறையும், என்று அவர் சுட்டிக் காட்டினார்.

சமீபத்தில் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்களை பாதிக்கும் வகையில் விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வந்தது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவிப்பதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் சில அடிப்படை உண்மைகளை அவர்களும் (அமெரிக்கர்களும்) புரிந்து கொண்டாக வேண்டும் என்றார். சீனாவில் அதிகரித்துவரும் தொழிலாளர் ஊதியம் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளன. ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளன. ஆனால் அமெரிக்கர்கள் ஏன் வரத் தயங்குகின்றனர் என்பது புரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மின்னணு துறையில் முதலீடு செய்ய பெரும்பாலான நாடுகள் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக இஸ்ரேல் ஆர்வமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமெனில் இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அதற்கு பொருள்கள் இங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவின் உற்பத்தித் துறை மேம்படுத்தப்படவில்லையெனில் வர்த்கதகப் பற்றாக்குறை 30,000 கோடி டாலராக இருக்கும். இது நுகர்வோர் மின்னணு பொருள் இறக்குமதியால் ஏற்படுபவை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இப்போது கச்சா எண்ணெய் இறக்குமதி 14,000 கோடி டாலராக உள்ளது. இத்தகைய சூழலில் மின்னணு பொருள் இறக்குமதிக்கு 30,000 கோடி டாலர் செலவிட்டால் நாடு தாங்குமா? என்று அவர் கேள்வியெழுப்பினார். இதே நிலை நீடித்தால் நாடு திவாலாகிவிடும் என்றார். எனவே உற்பத்தி மையங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்திய தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் அமெரிக்க செல்வதில் நிலவும் விசா கட்டுப்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தாராளமயம் பற்றி அமெரிக்கா விரிவாக பேசுகிறது. ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குக் கட்டுப்பாடுகளை அதாவது இந்திய வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு வருவதை விசா மூலம் கட்டுப்படுத்துகிறது. இது பரஸ்பரம் நட்பு நாட்டுக்கு நல்ல அணுகுமுறையாக இருக்காது என்று தான் கருதுவதாக சிபல் குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகப் பழமையான ஜனநாயக அமைப்பு கொண்ட நாடு இந்தியா. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீண்ட கால நட்பு நாடாக இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது மன நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியர்களின் வாங்கும் திறன், சர்வதேச வர்த்தக நிலவரத்துக்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியர்களின் வாங்கும் சக்தி குறையும்போது இங்கு அமெரிக்கர்களால் பொருள்களை விற்பனை செய்யவே முடியாது. தேவையெனில் 2சதவீத பெரும் பணம் படைத்தவர்கள் அமெரிக்க தயாரிப்புகளை வாங்கலாம். 90 சதவீதம் பேரால் வாங்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். கீழ் நிலையில் இந்தியாவுக்கு உதவாமல் இந்தியர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியாது என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றார் கபில் சிபல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x