

நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது. திரட்ட உத்தேசித்துள்ள தொகை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்ற வங்கியாளர்கள் மாநாட்டிற்கு இடையே
செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
இந்த வாரத் தொடக்கத்தில் தான் விருப்ப ஒதுக்கீடு மூலம் வங்கிப் பங்குகளை ஒதுக்கி ரூ. 9 ஆயிரம் கோடி திரட்ட உத்தேசித்துள்ளதாக பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார். வங்கியின் முதல் நிலை (டயர்-1) மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இது தவிர, மத்திய அரசு விருப்ப ஒதுக்கீடு பத்திரங்களை வாங்குவதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடியை வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாக உறுதி அளித்துள்ளது.
வாய்ப்புள்ள அனைத்து துறைகளுக்கும் வங்கி கடன் வழங்குகிறது என்று தெரிவித்த அவர், இருப்பினும் வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளுக்கு கூடுதலாக கடன் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
பண வீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் உயர்ந்திருப்பது குறித்து கவலை தெரிவித்த அவர், இத்தகைய சூழல் வங்கிக்கு மிகவும் சவாலான சமயமாகும்.பணவீக்க விகிதம் அனேகமாக ஜனவரி மாதத்தில் குறைந்துவிடும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பருவ மழை பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்திருப்பதால் பொருள் வரத்து அதிகரித்து உணவுப் பொருள்களின் விலை குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.