

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடங்க உள்ள விமான நிறுவனத்துக்கு புதிய பெயரைத் தேர்வு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வித்தியாசமான பெயர்களை பரிந்துரைக்குமாறு 2 விளம்பர நிறுவனங்களை டாடா நிறுவனம் நாடியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவ னமும் இணைந்து புதிய விமான நிறுவனத்தைத் தொடங்க உள்ளன. இந்நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு 49 சதவீத பங்குகளும் இருக்கும். புதிய விமான நிறுவனத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்க உள்ளது.
இந்நிலையில் டாடா நிறுவனத்தின் பெயரோ அல்லது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரோ இல்லாத புதிய பெயரை பரிந்துரைக்குமாறு விளம்பர நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இப்புதிய நிறுவனம் ஏ320 ரக ஏர்பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 20 விமானங்களை குத்தகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.