

கடந்த நிதியாண்டில் (2016-17) மியூச்சுவல் பண்ட் துறையின் மொத்த சொத்து மதிப்பு 42 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது மியூச்சுவல் பண்ட் துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17,50,000 கோடியாக இருக்கிறது. 2015-16 நிதியாண்டில் இந்த துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,30,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பிரிவுகளில் முதலீட்டாளர்கள் கூடுதலாக ரூ.3,40,000 கோடியை முதலீடு செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் லிக்விட், இன்கம், பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முறையே ரூ.1,20,000 கோடியும் ரூ.90,000 கோடியும் ரூ.70,000 கோடியும் புதிய முதலீடுகளாக வந்துள்ளதாக தர மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இஎல்எஸ்எஸ் உட்பட ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்களில் மார்ச் காலாண்டில் ரூ.8,216 கோடி முதலீடு வந்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்த முதலீடு ரூ.6,462 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஈக்விட்டி பண்ட்களின் மொத்த சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5,40,000 கோடியை எட்டியிருக்கிறது. 2017-ம் நிதி யாண்டில் இந்த பிரிவுக்கு ரூ.70,367 கோடிக்கு மொத்த முதலீடு வந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை முறையான முதலீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 6.2 லட்சம் கணக்குகள் இணைந்துள்ளன. ஒரு கணக்குக்கு சராசரியாக ரூ.3,100 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள் என இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கமான ஆம்பி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் சந்தையின் நிலைமை ஏற்ற இறக்கமாக இருந்த போதிலும் மொத்தம் 77.4 லட்சம் கணக்குள் புதிதாக இணைந்துள்ளதாக கூறியுள்ளது. மொத்த நிதியாண்டில் மார்ச் மாதத்தில் மட்டும் 10.1 லட்சம் புதிய கணக்குகள் இணைந்துள்ளன.
இந்த 10.1 லட்சம் புதிய கணக்குகளில் ஈக்விட்டி பிரிவுகளில் இருந்து மட்டும் 7.4 லட்சம் புதிய கணக்குகள் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளன.