Last Updated : 29 Mar, 2017 10:39 AM

 

Published : 29 Mar 2017 10:39 AM
Last Updated : 29 Mar 2017 10:39 AM

தொடர்ந்து 3 நிதி ஆண்டுகளாக ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட 43 நிறுவனங்கள் நஷ்டம்

ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட 43 பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இத்தகவலை மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ மக்களவையில் தெரிவித்தார்.

குறைந்த அளவிலான பயன் பாடு, வளம் குறைவு, கடுமையான போட்டி, சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான உத்திகள் வகுக்காதது, தவறான நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களால் இவை நஷ்டத்தை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.

மக்களவையில் எழுத்து மூல மாக அளித்த விளக்கத்தில் பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் ஆன்டி பயாடிக்ஸ், ஹெச்எம்டி வாட்சஸ் லிமிடெட், இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்ம சூடிகல்ஸ் உள்ளிட்ட நிறுவனங் களும் நஷ்ட பட்டியலில் உள்ள தாக அவர் கூறினார். மொத்தம் 43 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து மூன்று நிதி ஆண்டு களாக அதாவது 2013 முதல் 2016 வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாகக் கூறினார்.

ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்ப ரேஷன், கொச்சார் பேப்பர் மில் மற்றும் அசாமில் உள்ள நகோன் பேப்பர் மில் ஆகியவற்றை நவீன மயமாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இன்னமும் முழுமை அடையவில்லை என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

காகித ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கு மூங்கில்கள் கொள்முதலில் மிகப் பெரும் அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதே முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மூங்கில் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இப்போது இந்த வழக்கு மத்திய குற்றப் புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x