ஹங்கேரியில் முதலீடு: இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு

ஹங்கேரியில் முதலீடு: இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், கட்டுமானம், எரிசக்தி, குடிநீர், கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் ஹங்கேரியில் முதலீடு செய்யலாம் என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஒர்பான் அழைப்புவிடுத்தார்.

மும்பையில் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், ஹங்கேரியில் இந்திய தொழில் துறையினர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஹங்கேரியில் 9,000 இந்தியர்கள் பணிபுரிவதாகக் குறிப்பிட்ட அவர் இந்தியாவின் டிசிஎஸ், சிஜி எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நாட்டில் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக நேரடி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்பதில் ஹங்கேரி தீவிரமாக உள்ளதாக அவர் கூறினார். முதல் கட்டமாக மும்பையிலிருந்து புடாபெஸ்டுக்கான விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் இரு நாடுகளுமே தீவிரமாக உள்ளன. இதற்காக ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை அளிக்கும். அதனடிப்படையில் வர்த்தகத்தில் நிலவும் சிரமங்கள் களையப்படும் என்று அவர் தெரிவித்தார்.

1990ம் ஆண்டிலிருந்து இந்தியாவும் ஹங்கேரியும் பல்வேறு தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தம், விமான சேவை ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் விவசாயம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹங்கேரி பிரதமருடன் இந்தியா வந்துள்ள ஹங்கேரி தொழிலதிபர்கள் இந்திய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்திய நிறுவனங்கள் இதுவரை 150 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.

இந்தியா, ஹங்கேரி இடையிலான வர்த்தகம் 64 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உள்ளது. இது விரைவில் 100 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்ப்பதாக சிஐஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in