

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் பிராந்திய தலைவர் பி. சந்தானம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சமுக திட்டங்களான பள்ளிக் கல்விக்கு ரூ. 17,731 கோடி ஒதுக்கியுள்ளார். சுகாதாரத்துக்கு ரூ. 7,005 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென் பிராந்திய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு முகமை (எஸ்பிவி) அமைக்கத் திட்டமிட்டு 53 ஏக்கர் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சமாகும். மதுரை-தூத்துக்குடி இடையே தொழில்துறை காரிடார் ஏற்படுத்த வேண்டும் என்ற சிஐஐ யோசனை ஏற்கப்பட்டுள்ளது. இது இப்பிராந்தியத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு பெருகும் என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியை முடுக்கிவிடுவதன் மூலம் போட்டியை எதிர்கொள்வது என்ற சிஐஐ கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு கொள்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் ஒருங்கிணைந்த ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும்.
இதன் மூலம் தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு இலக்கை எட்டுவதற்கு வழிவகுப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.