Published : 07 Mar 2014 10:32 AM
Last Updated : 07 Mar 2014 10:32 AM

குறைந்த விலை லாரி: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைந்த விலையிலான லாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பிரைமா என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

பிரைமா எல்எக்ஸ் என்ற பெயரிலான லாரி வழக்கமான லாரி விலையை விட 20 சதவீதம் குறைவானதாகும். 2009-ம் ஆண்டு அறிமுகப்பட்டுத்தப்பட்ட இந்த லாரி, இப்பிரிவில் 65 சதவீத விற்பனைச் சந்தையை இப்போது பிடித்துள்ளது என்று நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரவி பிஷ்ரோடி தெரிவித்தார்.

புதிதாக 10 வெவ்வேறு மாடல் லாரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 6 கனரக லாரிகளாகும். கட்டுமான பிரிவில் பயன்படுத்த 4 மாடல்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே விற்பனைக்கு வந்துள்ள பிரைமா மாடல் லாரிகளை விட இது மேலும் 20 சதவீதம் விலை குறைவானதாகும். மல்டி ஆக்ஸில் லாரிகள் விற்பனை 2011-12-ம் ஆண்டில் 2 லட்சமாக இருந்தது.

இப்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பிரைமா எல்எக்ஸ் லாரியின் விலை ரூ. 18.5 லட்சம் முதல் ரூ. 32.5 லட்சம் வரையாகும். இந்நிறுவனத்தின் பிரைமா லாரியின் விலை ரூ. 23 லட்சம் முதல் ரூ. 65 லட்சம் வரையில் உள்ளது. ஏற்கெனவே உள்ள மாடல் லாரிகளை விட இவை 5 சதவீதம் கூடுதல் விலை கொண்டவை. இதில் அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதே விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்றதாக நிச்சயம் இது செயல்திறன் கொண்டது என்று பிஷ்ரோடி குறிப்பிட்டார். நிறுவனத்தின் வழக்கமான லாரி விலை ரூ. 22 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரையாகும் என்று அவர் மேலும் கூறினார்.

கனரக வாகன விற்பனை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10 புதிய மாடல் லாரிகளை அறிமுகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2012-ம் நிதி ஆண்டில் மொத்தம் 62,786 லாரிகள் விற்பனையாயின. இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 46,757 ஆகக் குறைந்தது.

புதிய நிறுவனங்கள் சரக்குப் போக்குவரத்துக்கு உரிய வாகனங்களைத் தேர்வு செய்கின்றனர். அத்தகையோரின் தேவையை பிரைமா எல்எக்ஸ் நிச்சயம் போக்கும் என்று பிஷ்ரோடி குறிப்பிட்டார். இலகு ரக மற்றும் கனரக வாகன விற்பனைச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 67 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் லாரிகளின் மொத்த எண்ணிக்கையில் எல்எக்ஸ் ரக வாகனங்களின் பங்களிப்பு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயரும் என்று அவர் குறிப்பிட்டார். புதிதாக 10 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரைமா பிரிவில் மொத்தம் 40 மாடல் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும் டாடா நிறுவனத்தின் ஜாம்ஷெட்பூர் ஆலையில் தயாரானவையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x