

டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த வாரண்டி குழுமத்துடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய வாகன சேவையின் பிரபல நிறுவனமான டிவிஎஸ், அமெரிக்காவைச் சேர்ந்த தி வாரண்டி குரூப் நிறுவனத்துடன் இணைந்து கார், டிரக், டிராக்டர், இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து தரப்பு ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் முழுமையான வாரண்டி சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அனைத்து டிவிஎஸ் வாகனங்களும் ஒரு குடையின் கீழ் வாரண்டி சேவை பெறும். மேலும் முதல் ஆண்டில் 50,000 வாகனங்களுக்கும், அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வாகனங்களுக்கும் வாரண்டி சேவை வழங்க இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
மைடிவிஎஸ் மூலம் ஏற்கனவே வாரண்டி சேவையை டிவிஎஸ் நிறுவனம் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு. ஆர். தினேஷ், "டிவிஎஸ்ஸின் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பற்றிய அனுபவமும், வாரண்டி குரூப் நிறுவனத்தின் தேர்ந்த செயல்பாடும் இந்த கூட்டு ஒப்பந்தத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாரண்டி வர்த்தகத்தை டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஆசியாவில் ஏற்கனவே கிளைகள் உள்ள பல நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடியும்" என்றார்.