Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

ஆந்திராவில் பெப்சிகோ ரூ.1,200 கோடி முதலீடு

குளிர்பானம் மற்றும் நொறுக்குத்தீனி விற்பனையில் முன்னணியில் இருக்கும் பெப்சிகோ இந்தியா நிறுவனம் ஆந்திராவில் 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டில் குளிர்பான தயாரிப்பு நிலையத்தை அமைக்க திட்டமிட்டிருக்கிறது பெப்சிகோ இந்தியா நிறுவனம்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் தடா பகுதியில் இருக்கும் சிட்டியில் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருக்கிறது பெப்சிகோ. இந்த நிறுவனம் இந்தியாவில் அமைக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை இதுதான்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய பெப்சிகோ ஏற்கெனவே திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாகதான் 1,200 கோடி ரூபாயை இப்போது பெப்சி முதலீடு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆறு வருடங்களுக்கு ஆந்திராவில் இருந்து அதிக மாங்கனிகளை கொள்முதல் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ. சிவக்குமார் பேசும் போது, இந்த புதிய தொழிற்சாலை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும். மேலும் ஆந்திராவில் அமைப்பதில் எங்களுக்கு சந்தோஷம் என்றார். மேலும் சிட்டி தகுந்த கட்டுமானம், போக்குவரத்து, தகுதி வாய்ந்த நபர்கள் என தொழில்துறைக்கு தேவையான அனைத்தும் இங்கு இருக்கிறது என்றார்.

இந்த தொழிற்சாலையில் பழரசங்கள், விளையாட்டு குளிர்பானங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் என்று நிறுவனம் சொல்லி இருக்கிறது.

இது குறித்து ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி குறிப்பிடும் போது, பெப்சிகோ நிறுவனத்தை வரவேற்பதாகவும், இந்த தொழிற்சாலை மூலமாக 8,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

பெப்சிகோ இந்தியா நிறுவனத்துக்கு ஏற்கெனவே ஆந்திராவில் சங்கராரெட்டி என்னும் இடத்தில் இன்னொரு தொழிற்சாலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x