Published : 21 Oct 2013 11:56 AM
Last Updated : 21 Oct 2013 11:56 AM

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3.8% கீழாகக் குறையும்

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சி.ஏ.டி.) 3.8 சதவீதத்துக்கும் கீழாகக் குறையும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

அமெரிக்க அரசு கடன் பெறும் அளவை அதிகரித்து ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதைத் தொடர்ந்து பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு ஏற்கெனவே அளித்த ஊக்குவிப்பு சலுகைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கையின் விளைவாக நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். இதனால் நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3.8 சதவீதத்துக்கும் கீழாகக் குறைய வாய்ப்புள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அலுவாலியா குறிப்பிட்டார்.

அன்னியச் செலாவணி வரத்து மற்றும் இந்தியாவிலிருந்து வெளியேறும் அன்னியச் செலாவணி ஆகியவற்றுக்கு இடையே நிலவும் இடைவெளிதான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் நமது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 4.8 சதவீதமாக இருந்தது. அதாவது டாலர் மதிப்பில் 8,820 கோடி டாலராக இருந்தது. இதை 7,000 கோடி டாலராக குறைக்க நிதி அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ஜி.டி.பி.-யில் 3.8 சதவீதமாகும்.

அமெரிக்க அரசு சலுகைகளை திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது வெளியானால் சர்வதேச அளவில் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அந்நாட்டு பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்கள் திருப்திகரமாக உள்ளன. அமெரிக்க அரசின் சலுகைகள் திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகும்போது நமது நிலை மேலும் மேம்படும் என்று அவர் அவர் குறிப்பிட்டார். மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இதனால் ரூபாய் குறித்த ஸ்திரமற்ற நிலையால் உருவாகும் அச்சம் கிடையாது. இத்தகைய சூழலில் அமெரிக்க அரசின் பொருளாதார ஊக்குவிப்புச் சலுகைகளைத் திரும்பப் பெறுவதால் அடுத்த நிதி ஆண்டில் நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சௌமித்ர சாட்டர்ஜி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை 4,000 கோடி டாலர் முதல் 5,000 கோடி டாலர் அளவுக்குக் கட்டுப்படும் என்று கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, அவரது கருத்து திட்டக்குழுவின் கருத்து அல்ல என்று தெளிவுபடுத்தினார். சாட்டர்ஜி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று மான்டெக் மேலும் கூறினார்.

நமது வேளாண் உற்பத்தி அதிகரிக்கும்போது விவசாயம் அல்லாத பிற பொருள்களின் தேவை அதிகரித்து அதற்காக இறக்குமதி அதிகரிக்கும் என நினைக்கத் தேவையில்லை. இத்தகைய சூழலில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். ஆறு மாதங்களுக்கு முன்பாக நிதி அமைச்சகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3.8 சதவீதத்துக்குக் கீழாகக் குறையும் என்று கூறியிருந்ததை மான்டெக் சுட்டிக் காட்டினார். அதிக பொருளாதார வளர்ச்சி எட்டலாம் என்ற நிதி அமைச்சகத்தின் யூகமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வளர்ச்சி குறைவாக இருக்கும்போது இறக்குமதி அதிகரிக்கும். ஆனால் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணியாக இறக்குமதி உள்ளதுதான் பிரச்சினை என்று மான்டெக் சுட்டிக் காட்டினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீத அளவுக்கு இருந்தது. முந்தைய காலாண்டி (ஜனவரி முதல் மார்ச் வரை) வளர்ச்சி 4.8 சதவீதமாக இருந்ததை விட இது குறைவாகும். கடந்த நிதி ஆண்டில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாக சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் முதல் 5.5 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x