இந்தியாவில் ஆலை தொடங்க டெஸ்லாவுக்கு நிதின் கட்கரி அழைப்பு

இந்தியாவில் ஆலை தொடங்க டெஸ்லாவுக்கு நிதின் கட்கரி அழைப்பு
Updated on
1 min read

மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனம் ஆசிய உற்பத்தி மையத்தை இந்தியாவில் தொடங்க வேண்டும். துறைமுகத்துக்கு அருகிலேயே உற்பத்தி ஆலை அமைப்பதற்கான இடம் ஏற்படுத்தி தரப்படும். இதன் மூலம் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யமுடியும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவன ஆலையை பார்வையிட்டார். இந்தியாவில் மாசு இல்லாத சாலைப் போக்குவரத்தை ஏற்படுத்த டெஸ்லா நிறுவனம் இந்திய நிறுவனங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மாசு இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு மிகப் பெரிய அளவில் ஊக்கம் அளித்து வருகிறது. இதற்காக பயோ-எரிபொருள், சிஎன்ஜி, எத்தனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்றவைக்கு ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெஸ்லா நிறுவன உயர் அதிகாரிகளிடம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகவும் விரைவிலேயே இந்தத் துறையில் இந்திய சந்தையில் போட்டி நிலவும் என்று அதிகாரிகளிடம் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்காலத்தில் அதற்கான நேரம் வரும் பொழுது இந்தியாவின் அழைப்பை பற்றி பரிசீலிப்போம் என்று டெஸ்லா நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் குறைந்த விலை கொண்ட டெஸ்லா மாடல் 3 கார்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தையாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எலெக்ட்ரிக் டிரக்குகள், பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் திட்டங்கள் உள்ளதா என்று டெஸ்லா நிறுவன அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் கேட்டதற்கு, எதிர் வரும் காலங்களில் டிரக்குகள் மற்றும் பிக் அப் வேன்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்க திட்டம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in