

கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சி நிறுவனத்திடமிருந்து வரி நிலுவைத் தொகை ரூ.10,247 கோடியை வசூல் செய்ய வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த எண்ணெய், எரிவாயு நிறுவனம் கெயர்ன் எனர்ஜி பிஎல்சி-யாகும். இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கெய்ர்ன் இந்தியா செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை வேதாந்தா ரிசோர்ஸஸ் குழுமம் வாங்கியுள்ளது.
முன் தேதியிட்ட வரி விதிப்பு தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் பிஎல்சி வழக்கு தொடர்ந்திருந்தது. வரி தொடர்பான வழக்கை தொடர்ந்து நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கெய்ர்ன் கோரியிருந்தது. கடந்த வாரம் இந்த மனு மீது விசாரணை நடத்திய தீர்ப்பாயம் , இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதனால் வரி நிலுவையை வசூலிக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் இறங்கியுள்ளனர்.
வரி பாக்கிக்காக கெய்ர்ன் இந்தியா (தற்போது வேதாந்தா லிமிடெட்) நிறுவனத்திடமிருந்து கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய 10 கோடி டாலர் டிவிடெண்டை வரித்துறையினர் எடுத்துக் கொள்ள வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வரி ரீஃபண்டாக அளிக்கப்பட்ட ரூ.1,500 கோடி தொகையை திரும்பப் பெறும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் பிரிட்டனின் கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத்துக்கு உள்ள 9.8 சதவீத பங்குகளையும் வரித்துறையினர் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரித் துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இ-மெயில் மூலமான அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 16-ம் தேதி வருமான வரித்துறையினர் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் கெய்ர்ன் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகையான 10 கோடி டாலரை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இத் தொகையில் 5.3 கோடி டாலர் தொகையானது டிவிடெண்ட் ஆகும்.
இது தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன் தேதியிட்ட வரி விதிப்பை கைவிட வேண்டும் என்று கெய்ர்ன் பிஎல்சி நிறுவனம் முறையீடு செய்துள்ளது. இந்த முன் தேதியிட்ட வரி விதிப்பானது இந்தியா இங்கிலாந்து இடையி லான பரஸ்பர முதலீட்டு ஒப்பந் தத்தை மீறிய நடவடிக்கை என வாதிடுகிறது. மேலும் இத்தகைய முன் தேதியிட்ட வரி விதிப்பானது அந்நிய முதலீடு மற்றும் அதில் கிடைக்கும் லாபத்துக்கு உரிய வரி விதிப்பு இல்லை என்பதை உணர்த்துவதாக அது குறிப்பிட்டுள்ளது.