

மியூச்சுவல் ஃபண்ட் களில் (பரஸ்பர நிதியம்) தங்களது குழும நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கின்றன என்பதைக் கட்டாயமாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை, மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பான ’ஆம்பி’ விரைவில் பரிந்துரை செய்யப்போவதாகத் தெரிகிறது. மொத்தமாக இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்களில் தங்களது குழும நிறுவனங்களின் முதலீடு மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவல் குறித்து கருத்து கேட்க இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்க தலைவர் (ஆம்பி) ஹெச்.என். சினாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் துறை வல்லுனர்கள் இது வரவேற்கத் தகுந்த முடிவு என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் எவ்வளவு தொகையை கையாளுகிறது என்பது முதலீடு செய்வதற்கான ஒரு அளவுகோலாக இருக்கும்.
இப்போது குழும நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும்போது அந்த மியூச்சுவல் ஃபண்டின் உண்மையான மதிப்பு வெளியே தெரிய வரும். இது முதலீட்டாளர்கள் முடிவுகள் எடுக்க வசதியாக இருக்கும் என்று பிரைம் டேட்டா பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரித்திவி ஹால்தியா தெரிவித்தார்.
தங்களது குழும நிறுவனங்களில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது ஒன்றும் மோசமான செயல் கிடையாது, இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு உண்மையான நிலை தெரியவரும். இது வரவேற்கத் தகுந்த முடிவு என்று வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீரேந்திர குமார் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஆம்பியில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு தலைவர் கூறும் போது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் அதே குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்வது ஒன்றும் தவறு கிடையாது. மேலும் குழும நிறுவனங்கள் அதே குழுமத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது அந்த மியூச்சுவல் ஃபண்ட் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்றார்.
துறை வல்லுனர்களின் கருத்துப்படி பிர்லா மியூச்சுவல் ஃபண்டில் அதன் குழும நிறுவனங்களின் முதலீடு 15,000 கோடி ரூபாயும், ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்டில் அதன் குழும நிறுவனங்களின் முதலீடு 12,000 கோடி ரூபாயும், ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்டில் அதன் குழும நிறுவனங்களின் முதலீடு ரூ.10,000 கோடி முதல் 15,000 கோடி ரூபாயும் ரெலிகர் மியூச்சுவல் ஃபண்டில் அதன் குழும நிறுவனங்களின் முதலீடு 5,000 கோடி ரூபாயும், டாடா மியூச்சுவல் ஃபண்டில் அதன் குழும நிறுவனங்களின் ரூ. 8000 கோடி முதல் ரூ. 10, 000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதலில் ரிலையன்ஸ்
இதற்கிடையே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதல் முறையாக குழும நிறுவனங்களின் முதலீடு குறித்து தெரிவித்திருக்கிறது.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் கையாளும் தொகையில் 3.2 சதவீதம், அதாவது 3,274 கோடி ரூபாய் அளவுக்கு குழும நிறுவனங்களின் முதலீடு இருக்கிறது. இருந்தாலும் எந்த ஃபண்டில் எவ்வளவு தொகை என்பது குறித்து விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
நாட்டின் முக்கியமான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான நாங்கள் பொறுப்புடன் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறோம். இது மியூச்சுவல் ஃபண்ட் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சந்தீப் சிகா தெரிவித்தார்.