

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 2.83% சரிந்து ரூ.3,603 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.3,708 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 0.20 சதவீத அளவுக்கு நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமான மும் 0.89% சரிந்து ரூ.17,120 கோடி யாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி 3.4% உயர்ந்திருக்கிறது.
வருமான எதிர்பார்ப்பு
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 6.4% உயர்ந்து ரூ.14,353 கோடியாக இருக்கிறது. வருமானம் 9.7% உயர்ந்து ரூ.68,484 கோடியாக இருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் வருமான உயர்வு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என இன்ஃபோசிஸ் கணித்திருக்கிறது. காக்னிசென்ட் நிறுவனம் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அதைவிட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிப்பு குறைவாக இருக்கிறது. முன்னதாக 11.5 முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனமே கணித்திருந்தது கவனிக்கத் தக்கது.
இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.14.75யை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டை சேர்க்கும் பட்சத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங் குக்கு 25.75 ரூபாய் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 7,119 கோடி ரூபாய் டிவிடெண்டுக்காக செலவிடப்பட்டிருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 2,00,364 நபர்கள் பணியில் இருக் கின்றனர். கடந்த நிதி ஆண்டில் 37,915 நபர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக் கிறார்கள். முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 34,688 நபர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டிவிடெண்டாக வழங்கப்படுமா அல்லது பங்குகள் திரும்ப வாங்கப்படுமா என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய இணைத் தலைவர்
நிறுவனத்தின் புதிய இணை தலைவராக ரவி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்துவருகிறார். இயக் குநர் குழுவுக்கும், நிறுவனர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் சூழலில் இணை தலைவர் நியமனம் நடந்திருக்கிறது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ரவி பங்களிப்பு உதவியாக இருக்கும் என தலைவர் ஆர்.சேஷசாயி தெரிவித் திருக்கிறார்.
வருமான எதிர்பார்ப்பு குறைவாக இருப்பதால் நேற்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்கு கடும் சரிவைச் சந்தித்தது. நேற்றைய வர்த்தகம் முடிவில் 3.87 சதவீதம் சரிந்து 931.40 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவிப்பதற்கு வருகைதரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா (வலது) மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ்.