

உலக அளவில் பணக்கார 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சராசரியாக இந்தியர்கள் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் ``நியூ வேர்ல்டு வெல்த்’’ என்கிற ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் செல்வம் படைத்தவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 5,500 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்த சொத்து மதிப்பு மிகவும் அதிகம் என்றும் அந்த குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வு, இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பார்த்தால் சராசரியாக இந்தியர்கள் மிகவும் வறுமையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
``நியூ வேர்ல்டு வெல்த்’’ அறிக் கையின்படி, உலக அளவில் பணக் கார பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் அதிகம் செல்வம் படைத்தவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 48,700 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்த பட்டியலில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மட்டும்தான் உள்ளது. இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது இந்தியர்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். அதே சமயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி உறுதியான இடத்தில் உள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதிக செல்வம் படைத்த 10 நாடுகளில், கடந்த 15 ஆண்டுகளில் சீன அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வலிமையான வளர்ச்சியை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகள் இத்தாலியை அடுத்த சில ஆண்டுகளில் முந்திச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் சீனா இரண்டா வது இடத்தில் உள்ளது. இங்கு அதிக செல்வம் படைத்தவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 17,300 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஜப்பான் 15,200 பில்லியன் டாலர் களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜெர்மனி 9,400 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதர நாடுகளாக பிரான்ஸ் ஆறாவது இடத்தில் 7,600 பில்லியன் டாலர்களுடன் உள்ளது. இத்தாலி 5,000 பில்லியன் டாலர்களுடன் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளது. கனடா 4,800 பில்லியன் டாலர்களுடன் ஒன்பதாவதாகவும், 4,500 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆஸ்திரேலியா பத்தாவது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவினுடைய புள்ளிகளில் ஈர்க்கக்கூடியதும், பரிசீலிக்க வேண்டிய விஷயமும் அங்கு மொத்த மக்கள் தொகையே 2.2 கோடிதான் என்று அந்த ஆய்வு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள அதிக சொத்து கொண்ட தனிநபர்களின் விவரங்கள் அடிப்படையில் மொத்த தனிநபர் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தனிநபர் சொத்துகள் நிலம், பங்கு முதலீடுகள், தொழில்கள் மற்றும் கையிருப்புகள் என மொத்த சொத்துகளை கணக்கிட்டு அவருக்கான கடன்களை கழித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கணக்கில் உள்ள அரசு பாண்டுகள் மற்றும் சொத்துகளை இந்த பட்டியல் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.