Published : 04 Dec 2013 09:34 AM
Last Updated : 04 Dec 2013 09:34 AM

பிஹெச்இஎல், சிஐஎல் பங்குளை விற்க பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல், கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்ய அந்தந்த துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 40 ஆயிரம் கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 6 அரசுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ. 1,325 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிவடைய இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவான நாள்களே உள்ளன.எனவே இலக்கை எட்டவேண்டுமெனில் அதிக வருமானம் தரக்கூடிய பிஹெச்இஎல் மற்றும் கோல் இந்தியா நிறுவன பங்கு விற்பனையை துரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பொது மக்களிடம் பங்குகளை விற்பனை செய்வது மூலம் நிதி திரட்டுவது தவிர வேறு சில வழிமுறைகளையும் கண்டறியுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதாவது பங்குகளைத் திரும்பப் பெறுவது, ஈவுத் தொகை அளிப்பது, பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும். பிரதமர் கூட்டிய உயர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

கனரக தொழில்துறை, நிலக்கரித்துறை ஆகியன இது குறித்து தீவிரமாக ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. பங்கு விற்பனைக்கு மாற்றான வழிமுறைகளைக் கண்டறியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிஹெச்இஎல் மற்றும் கோல் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இப்போதைய பங்குச் சந்தை நிலவர சூழலில் பொதுப் பங்கு வெளியிடுவது லாபகரமானதாக இருக்காது என்று அந்தந்த துறை அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்போதைக்கு பிஹெச்இஎல், கோல் இந்தியா நிறுவனப் பங்கு விற்பனை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீ ஜெய்பிரகாஷ் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியது:

கோல் இந்தியா நிறுவன பங்கு விற்பனை குறித்து பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து உறுதியான முடிவு இன்னமும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

கோல் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு தொழிலாளர் யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இந்நிறுவன பங்கு விற்பனையில் இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியாமல் உள்ளது. அதேசமயம், பிஹெச்இஎல் நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு 2011-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் இதுவரை விற்பனை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு ஏற்கெனவே 10 சதவீதம் கோல் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. தொழிலாளர் யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 31.58 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இப்போது கோல் இந்தியா பங்கு விலை ரூ. 274.30-க்கு விற்பனையாகிறது. இந்த விலை அடிப்படையில் 5 சதவீத பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 8,600 கோடி கிடைக்கும்.

கோல் இந்தியா நிறுவனத்தில் அரசுக்கு 90 சதவீத பங்குகள் உள்ளன. இதேபோல பிஹெச்இஎல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை சந்தை விலையான ரூ. 158.40-க்கு விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ. 1,300 கோடி கிடைக்கும். இது தவிர கூடுதலாக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்மற்றும் பால்கோ நிறுவனத்தில் எஞ்சியுள்ள பங்கு விற்பனை மூலம் திரட்டவும் அரசு உத்தேசித்துள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு 29.5 சதவீத பங்குகளும், பால்கோ நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளும் உள்ளன.

இந்த இரு நிறுவனங்களிலும் அதிகபட்ச பங்குகளை வேதாந்தா குழுமம் வைத்துள்ளது. எனவே பங்குளை அந்நிறுவனத்திடமே விற்றுவிட அரசு தீர்மானித்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ. 14 ஆயிரம் கோடி அரசுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

எப்படியிருப்பினும் அரசு நிர்ணயித்த இலக்கான ரூ. 40 ஆயிரம் கோடியை பங்கு விற்பனை மூலம் திரட்டுவது கடினம். இருப்பினும் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதத்தைத் தாண்டாது என நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x