Published : 08 Jun 2017 10:11 AM
Last Updated : 08 Jun 2017 10:11 AM

ஐபேட் புரோ முதல் ஹோம் ஸ்பீக்கர் வரை: புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது ஆப்பிள்

ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச டெவலெப்பர்கள் மாநாட்டில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். இந்த டெவலெப்பர் மாநாட்டில் புதிய மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் ஆப்ரேட்டிங் சிஸ்டம், வாட்ச் ஆப்ரேட்டிங் சிஸ்டம், புதிய சாப்ட்வேர்கள், ஐபேட் புரோ, ஹோம்பேட் என பல்வேறு தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நேற்று முன்தினம் ஆப்பிள் நிறுவனத்தின் டெவலெப்பர்கள் மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் கலந்து கொண்டு புதிய தயாரிப்புகள் பற்றி விளக்கமளித்தார்.

ஐபேட் புரோ

ஐபேட் புரோ 10.5 அங்குலம் திரை மற்றும் ஐபேட் புரோ 12.9 அங்குலம் திரை கொண்ட இரண்டு மாடல்களில் புதிய ஐபேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல் ஐபேட்களுக்கான இந்திய விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப் பட்ட ரெட்டினா திரை மற்றும் ஏ10எக்ஸ் பிராசசர் உடன் இந்த ஐபேட் வந்துள்ளது. 12 எம்பி ஐசைட் கேமரா, 7 எம்பி ஹெச்டி முன்பக்க கேமரா, புதிய ஐஓஎஸ் 11-யை மேம்படுத்துவதற்கான வசதிகள் என அனைத்தையும் கொண்டிருக்கிறது. 64 ஜிபி நினைவக திறன், 10.5 அங்குல திரை வசதி கொண்ட ஐபேட் புரோவின் இந்திய விலை ரூ.52,000. 12.9 அங்குல திரை வசதி, 64 ஜிபி நினைவக திறன் கொண்ட ஐபேட் புரோவின் இந்திய விலை ரூ. 65,000. ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம் பேட்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ஹோம்பேட் ஸ்பீக்கர் அமேசான் நிறுவனத்தின் எகோ ஸ்பீக்கருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹோம் ஸ்பீக்கர் ஆப்பிள் ஏ8 பிராரஸசர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 அங்குல அளவுக்கு ஊபர் சிஸ்டம், 6 மைக்ரோபோன், 7 டிவிட்டர்ஸ் என பல்வேறு வசதிகளுடன் வந்துள்ளது. செயற்கை நுண் ணறிவு மூலம் இயங்கும் இந்த ஹோம் ஸ்பீக்கருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஓஎஸ் 11

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் ஐபேட்களின் இயங்குதளம் எப்போதுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. அந்தவகையில் இந்த அறிவிப்பில் ஐஓஎஸ் 11-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற் போதைய ஐஓஎஸ் 10 இயங்குதளத்தை 86 சதவீதம் பயன்படுத்துகின்றனர். ஒரே ஐடியை பயன்படுத்தி ஐமெசேஜ்களை அனுப்பிக்கொள்ளும் வகையில் ஐஓஎஸ் 11 இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய போட்டோ மெசேஜ்களை கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து ஐபோன் அல்லது ஐபேட் சாதனத்தின் நினைவக திறனை பயனுள்ள வகையில் உபயோகிக்க முடியும்.

வாட்ச் ஓஎஸ் 4

ஆப்பிள் வாட்ச்சின் அடுத்த இயங்குதளமான வாட்ச் ஓஎஸ்4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ‘சிரி பேஸ்’ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அதாவது நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் மற்றும் பயன்பாட்டு முறையை புரிந்துகொண்டு `சிரி பேஸ்’ உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும். ஒரே சமயத்தில் பல செயல்பாடுகளை அளவிடும் மேம்பாடுகளும் இதில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x