

கடந்த ஜூலை மாதம் நடந்த நிதி மற்றும் கடன் கொள்கையில் எந்த விதமான மாற்றங்களையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. இந்தச் சூழ்நிலையில் ரூபாய் அதிகளவு சரிந்து, நிச்சயமற்ற தன்மையில் இருக்கிறது. பணவீக்கமும் சென்ற மாதத்தை விட அதிகமாக இருக்கிறது.
இந்த காரணங்களால் வரும் 20-ம் தேதி நடக்கும் நிதிக்கொள்கையில் வட்டி குறைப்பு செய்யும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக இந்தியாவின் முக்கியமான பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வட்டிவிகிதம் தற்போதைய நிலையிலே தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, வட்டியைக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு குறைந்த வட்டியில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார்.
இதுகுறித்து "ஃபிக்கி"யின் முதன்மை துணைத்தலைவர் சித்தார்ந்த பிர்லா கூறும் போது முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிரதமரை நேற்று சந்தித்தார். இதுகுறித்து பேசிய ரகுராம்ராஜன், இந்த சந்திப்பு வழக்கமான ஒன்றுதான்.
மேலும் நடப்பு பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதித்தோம் என்று நிருபர்களிடம் கூறினார்.
மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, இங்கிலாந்தில் குறிப்பிட்ட துறையை ஊக்குவிப்பதற்காக குறைந்த வட்டியில் வங்கிக்கு கடன் கொடுத்து அரசாங்கம் உதவுகிறது. அதுபோன்ற ஒரு திட்டத்தை இங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாக தெரிவித்தார்.
விழாக்காலம் ஆரம்பித்து விட்டாதால் வாகனத்துறை, கட்டுமானத் துறை போன்றவற்றை ஊக்கு விக்கப்பதற்காக குறைந்த வட்டியில் பணம் கிடைப்பதற்கான திட்டத்தை வெளியிட இருப்பதாகத் தெரிகிறது.