

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP). ஜி.டி.பி யை கணக்கிடுவது மிகவும் கடினமான செயலாகும். இன்று வரை அதை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனால், இந்த கணக்கிடும் முறையை செம்மைப்படுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஏன் ஜி.டி.பி யை நாம் கணக்கிட வேண்டும்?
ஒரு நாட்டின் வளர்ச்சிநிலையை தெரிந்துகொள்ள ஜி.டி.பி.யைவிட சரியான குறியீடு இதுவரை கணக்கிடப்படவில்லை. உலக நாடுகள் எல்லாமே ஒரே மாதிரியான ஜி.டி.பி கணக்கிடும் முறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளும் ஜி.டி.பி கணக்கிடும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதால் இதை கணக்கிடும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு எல்லா நாடுகளிலும் ஒரே முறையில் ஜி.டி.பி கணக்கிடப்படுவதால் ஒரு நாட்டின் வளர்ச்சியை மற்றொரு நாட்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவது எளிதாகியுள்ளது.
அதே போல் வெவ்வேறு காலங்களில் உள்ள ஜி.டி.பி யை ஒப்பிடுவதும் எளிதாகயுள்ளது. உதாரணமாக 1960 களில் உள்ள ஜி.டி.பியை 1990களில் உள்ள ஜி.டி.பியுடன் ஒப்பிட முடியும்.
ஜி.டி.பியின் அடிப்படையில்தான் உலக நாடுகளை உயர்ந்த வருமானமுள்ள நாடுகள், குறைந்த வருமானமுள்ள நாடுகள், நடுத்தர வருமானமுள்ள நாடுகள் என மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. உதாரணமாக அமெரிக்க டாலர் மதிப்பில் 2012-ல் இந்தியாவின் ஜி.டி.பி 1.82 ட்ரில்லியனாகவும், சீனாவின் ஜி.டி.பி 8.227 ட்ரில்லியனாகவும், பாகிஸ்தான் ஜி.டி.பி 231.2 பில்லியனாகவும், அமெரிக்காவின் ஜி.டி.பி 15.68 ட்ரில்லியனாகவும் இருந்தது. அதாவது பாகிஸ்தான் பொருளாதாரத்தைப் போல எட்டு மடங்கு பெரியது நமது பொருளாதாரம்.
ஆனால் சீனாவின் பொருளாதாரம் நம்முடையதைப் போல நான்கரை மடங்கு பெரியது. சீனாவை போல இருமடங்கு பெரியது அமெரிக்கப் பொருளாதாரமென்று நாம் அறிய முடிகிறது.