Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

மோசமான ஒப்பந்தத்தைவிட ஒப்பந்தம் நிறைவேறாதது மேலானது: வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யு.டி.ஓ) மாநாட்டில் மோசமான ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைவிட எந்த ஒப்பந்தமும் நிறைவேறாதது மேலானது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

பாலியில் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகை நிருபர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய அவர், உணவு பாதுகாப்பு மசோதா குறித்து எந்த விதமான சமாதானமும் செய்து கொள்ள இந்தியா தயாராக இல்லை என்றார். எதிர்வரும் பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டே உணவு பாதுகாப்பு மசோதா விஷயத்தில் இந்தியா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். உணவு பாதுகாப்பு மசோதா விஷயத்தில் ஏற்கெனவே இந்தியா வலியுறுத்தி வந்த கோரிக்கைகளைத்தான் நிறைவேற்றுமாறு கூறியது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஒரு மோசமான ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதைக் காட்டிலும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாதது மேலானது என்று அவர் குறிப்பிட்டார்.

பாலி மாநாடு நியாயமானதாகவும், நடுநிலையானதாகவும் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவது சகஜம். அதேசமயம் ஜனநாயக நாட்டுக்கென சில கொள்கைகள் இருக்கலாம். உணவு பாதுகாப்பு மசோதா ஹாங்காங்கில் 2005-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டிலேயே வலியுறுத்தப்பட்டது.

பொதுத் தேர்தலை முன்னிட்டுத்தான் இந்த விஷயத்தில் இந்தியா பிடிவாதமாக உள்ளது என்ற கருத்து தவறானது என்று சர்மா சுட்டிக் காட்டினார். பொதுத் தேர்தல் திடீரென நடைபெற உள்ளதைப் போலவும், இப்போதுதான் தொப்பியிலிருந்து முயலை வெளியே எடுக்கும் மந்திரவாதியைப் போல இந்தியா உணவு பாதுகாப்பு மசோதா விஷயத்தில் தீவிரம் காட்டுவதாகக் கூறக்கூடாது என்றார்.

இந்த மசோதாவுக்கு ஏற்ற வகையில் டபிள்யு.டி.ஓ தீர்மானத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று 8 ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் இது குறித்து பேச்சு நடத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் பல முறை விவாதிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு பேச்சு முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கான காரணத்தை உணர்ந்தவர்கள் இருந்தபோதிலும் இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்கா, விவசாயம் தொடர்பான டபிள்யு.டி.ஓ. ஒப்பந்தத்தின்படி விவசாயத்துக்கு அளிக்கப்படும் மானிய உதவி 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை மீறும் நாடுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்த விஷயத்தில் உறுதியான தீர்வு எட்டப்படும் வரை வேளாண் மானிய உதவித் தொகை தொடரலாம் என்றும் உணவு பாதுகாப்பு மசோதாவை சுமுகமாக நிறைவேற்றி அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. உணவு பாதுகாப்பு மசோதா விஷயத்தில் டபிள்யு.டி.ஓ. அமைப்பில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூற முடியாது என்று கூறிய சர்மா, அதிக மக்கள் வாழும் நாடுகளில் 75 சதவீதம் இந்தியாவின் நிலைக்கு ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய சர்மா, டபிள்யு.டி.ஓ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தித்தானே தவிர, கெஞ்சி, கூத்தாடி, பிச்சையெடுத்தாவது ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

1986-88-ம் ஆண்டில் உள்ள விலை நிலவரத்தின் அடிப்படையில் 10 சதவீத மானிய ஒதுக்கீடு என்ற நிபந்தனையை இந்தியா ஏற்காது. மானிய ஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியமான, விவாதத்துக்குரிய விஷயமாகும். இது குறித்து கணக்கீடுகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நிலைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் அனைத்திலுமே மக்கள் தொகை அதிகம் என்று சுட்டிக்காட்டினார். உணவு பாதுகாப்புக்காக அரசு கிடங்குகளில் தேக்கி வைக்கப்படும் உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் என்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தேகம் அனாவசியமானது என்றார்.

இவ்விதம் ஏழை மக்களுக்காக தேக்கி வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை எவரேனும் ஏற்றுமதி செய்வது தெரிந்தால், அவர் அனுப்பிய சரக்கு துறைமுகத்தைச் சென்றடைவதற்குள் அவர் சிறைக்குச் சென்றுவிடுவார் என்றும் சர்மா குறிப்பிட்டார். பாலியில் நடைபெறும் டபிள்யு.டி.ஓ. மாநாட்டில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லையென்றால் என்ன செய்வது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோல எதுவும் நடக்காது. அதுபோன்ற குழப்பமான சூழலை யார் உருவாக்குகிறார்கள் என்பது தெரியாது என்று ஆனந்த் சர்மா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x