

பணவீக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து தொழில்துறையை ஊக்குவிக்க கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியுள்ளது.
தொழில்துறை உற்பத்தி மைனஸ் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை பழைய நிலைக்குக் கொண்டு வந்து வளர்ச்சியை எட்ட வேண்டுமென்றால் இத்துறையை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு முதலாவதாக குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பரில் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம் 6.16 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத சரிவாகும். ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் தொழில்துறை வளர்ச்சியும் முக்கியம், பொருள்களின் விலை குறைந்து வரும் சூழலில் இப்போதுதான் கடனுக்கான வட்டியைக் குறைக்க முடியும் என்று அசோசேம் செயலர் டி.எஸ். ரவாத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பரில் தொழில்துறை வளர்ச்சி மைனஸ் 2.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத சரிவாகும். டிசம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 13.68 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதத்தில் இது 19.93 சதவீதமாக இருந்தது. கடந்த மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.