புற விளைவுகள் (Externality) என்றால் என்ன?

புற விளைவுகள் (Externality)  என்றால் என்ன?
Updated on
1 min read

புற விளைவுகள் (Externality)

பொது பொருள்களை (Public Goods) சந்தையின் தோல்வி (Market Failure) காரணமாக அரசு வழங்க வேண்டும் எனவும் வேறு காரணங்களுக்காக சந்தை தோல்வி அடையும் எனவும் பார்த்தோம். புறவிளைவுகள் (Externality) என்பது மற்றுமொரு சந்தையின் தோல்வியாகும்.

உதாரணமாக, நாம் வசிக்கும் பகுதியில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை உற்பத்தி செய்யும்போது வெளியாகும் புகை, அருகிலுள்ளவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தலாம் அல்லது அங்குள்ள விலை நிலங்களிலோ நீர்நிலைகளிலோ படிந்து ஏற்படுத்தும் பாதிப்புகள் புறவிளைவுகள் ஆகும். அதாவது புகையினை வெளியிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துவது உற்பத்தியாளரின் நோக்கமல்ல. லாபம் மட்டுமே அவரது நோக்கம்; ஆனால் அவரின் லாப நோக்கம் ஏற்படுத்தும் புறவிளைவுகளைப் பற்றி அவர் பொருட்படுத்தாமல் இருக்கலாம் என்பதாலும் அது பொது நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலும் அரசு தலையிட்டு அவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

புறவிளைவுகள் நேர் புறவிளைவு (Positive Externality ) எதிர் புறவிளைவு (Negative Externality) என இரு வகைப்படும். உதாரணமாக மேற்கூறியது பொதுநலனை பாதிக்கும் எதிர் புறவிளைவு. நேர் புறவிளைவு பொதுநலனை அதிகரிக்கும். உதாரணமாக, பெண் குழந்தைகளின் கல்வியினை கொள்வோம்; அப்பெண்ணின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு அவளுக்கு கல்வி வழங்கப்பட்டாலும், அவளை தாண்டி, அவள் குழந்தைகள், குடும்பம், அவள் சார்ந்துள்ள சமுகம் ஏன் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெண் கல்வியின் பயன் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தனியார் துறை இவைகளை கணக்கில் கொள்ளது; மாறாக கல்விக்கட்டணம் செலுத்தக் கூடியவர்களுக்கு மட்டுமே அது கல்வி வழங்கும். அதேசமயம் சமுகத்துக்கு கிடைக்கவிருக்கும் அதிக பயன் கருதி தேவையான அளவு பெண் கல்வியினை வசதியுள்ள வசதியற்ற அனைவருக்கும் வழங்கவேண்டியது அரசின் பொறுப்பாகும் சந்தையின் தோல்வி காரணமாக, பொது நலனை பாதிக்கும் எதிர் புறவிளைவுகளைக் குறைக்கவும், பொதுநலனை அதிகரிக்கும் நேர் புறவிளைவுகளை தேவையான அளவுக்கு வழங்கவும் வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in