

அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இந்திய மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸுக்கு 3.4 கோடி அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இம்முறைகேட்டைக் கண்டறிந்து சொன்னதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 49 கோடி வரை இழப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாக் பால்மர் என்ற அமெரிக்கர் இன்ஃபோசிஸ் அமெரிக்கக் கிளையில் பணிபுரிந்து வந்தார். இன்ஃபோசிஸில் விசா முறைகேடுகள் பரவலாக நடந்ததைக் கண்டறிந்ததற்காத் தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், எனவே இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரியும் கடந்த ஆண்டு டெக்ஸாஸ் தலைமை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் அவர்.
அவ்வழக்கை மத்திய நீதிபதி தள்ளுபடி செய்தார். ஆனால், இன்ஃபோசிஸின் விசா முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு இது தூண்டுகோலாக அமைந்தது. விசாரணை இறுதியில் இன்ஃபோசிஸ் விசா முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.
இது தொடர்பாக, டெக்ஸாஸ் மாகாண தலைமை வழக்குரைஞர் ஜான் பாலெஸ் கூறியதாவது:
இன்ஃபோசிஸ் நிறுவனம் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்களும் (சுமார் ரூ.30.7 கோடி), வெளியுறவுத்துறைக்கு 2.4 கோடி அமெரிக்க டாலர்களும் (சுமார் ரூ. 147.4 கோடி) டெக்ஸாஸ் மேற்கு மாவட்டத்தின் அமெரிக்க அரசு வழக்குரைஞர் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். இதனை 30 நாள்களுக்குள் முடித்தாக வேண்டும் என்றார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஜாக் பால்மருக்கு எவ்வளவு தொகை இழப்பீடாகக் கிடைக்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், மொத்த அபராதத் தொகையான 3.4 கோடி அமெரிக்க டாலரில் (சுமார் ரூ. 208.8 கோடி) 25 சதவீதம் வரை கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனால் 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதல் 80 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை (சுமார் ரூ. 30.7 கோடி முதல் 49.1 கோடி வரை) இழப்பீடாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசா முறைகேடுகளுக்காக விதிக் கப்பட்ட அதிகபட்ச அபராதத்தொகை களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.