

சுந்தரம் பாசனர்ஸ் லாபம் ரூ. 75 கோடி
டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் (எஸ்எப்எல்) நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.75.34 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 63 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.46.11 கோடியாக இருந்தது.
9 மாத காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.227.82 கோடியாகும். இது முந்தைய ஆண்டில் ரூ.126.79 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 79 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 709.32 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.613.90 கோடியாகும். 9 மாத காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.2,160.53 கோடியாகும். முந்தைய ஆண்டில் 9 மாத கால வருமானம் ரூ.1,906 கோடியாக இருந்தது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ.260.50 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி வருமானம் ரூ.211.41 கோடியாக இருந்தது. 9 மாத கால ஏற்றுமதி வருமானம் ரூ.766 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ.667 கோடியாக இருந்தது.
உள்நாட்டில் விற்பனை வருமானம் 9 மாத காலத்தில் ரூ.1,358 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ.1,205 கோடியாக இருந்தது.
விஜயா வங்கி லாபம் 4 மடங்கு உயர்வு
டிசம்பர் காலாண்டில் விஜயா வங்கியின் லாபம் 4 மடங்கு உயர்ந்து ரூ.230.28 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வங்கியின் லாபம் ரூ.52.61 கோடியாக இருந்தது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை சூழலிலும் வங்கியின் லாபம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,714 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,237 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக் கடன் அளவு மூன்றாம் காலாண்டில் 6.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வாராக் கடன் 4.32 சதவீதமாக இருந்தது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 424.17 கோடியாகும். முந்தைய ஆண்டு ரூ. 278 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.