

கவர்னராக இருந்து, வங்கிகளின் நிதி நிலைமையை மேம்ப டுத்துவது உள்ளிட்ட செய்ய வேண் டிய பணிகள் ஏராளமாக இருப்பதால் நீண்ட காலம் பதவியில் இருக்க விரும்பினேன். ஆனால் இப்போது மகிழ்ச்சியாக வெளியேறுகிறேன் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு ராஜன் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
இந்த நாட்டுக்கு என்ன தேவையோ அதனைச் செய்தேன். மீண்டும் நியமனம் செய்யப்படாதது குறித்தோ அல்லது அரசாங்கத்தில் அடுத்து என்ன பொறுப்பு என்பது குறித்த கவலையோ கிடை யாது. ஆனால் என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. வெறுக்கத் தக்க வகையில் அவை இருந்தன. அவற்றில் எந்த அடிப்படையும் இல்லை. அந்த குற்றச்சாட்டுகளை நான் ஒதுக்கினேன். அவற்றுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க வில்லை.
அதிக காலம் பதவியில் இருக்க விரும்பினேன் என்பதால், அந்த பதவியை அடைந்தே தீரவேண்டும் என்ற வேட்கை கிடையாது. செய்ய வேண்டிய வேலைகள் இருக்கி றது. அதனால் நீண்ட நாட்கள் இருக்க விரும்பினேன். இப்போது மகிழ்ச்சியாக வெளியேறுகிறேன்.
நான் எடுத்துக்கொண்ட பணிகளில் 90 முதல் 95 சதவீத பணி களை முடித்துவிட்டேன். என் பணியில் எந்த குறுக்கீடும் இல்லை. ஏற்கெனவே தெரிவித்தது போல அடிப்படையில் நான் கல்விப் பணியில் இருப்பவன். ரிசர்வ் வங்கி கவர்னர் என்பது பகுதி நேர வேலை என்று ராஜன் தெரிவித்தார்.
ராஜனின் பதவி காலம் செப் டம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது. கடந்த ஜூன் மாதம் பதவி நீட்டிப்பை விரும்பவில்லை என ராஜன் தெரிவித்தார்