

நாடுகளின் ஒதுக்கீடு தொடர்பான சீர்திருத்தங்களை அமல்படுத்த சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தவறிவிட்டது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது ஜி20 மாநாட்டின் தோல்வியைக் காட்டுவதாக பொருளாதார விவகாரங் களுக்கான செயலர் அர்விந்த் மாயாராம் குறிப்பிட்டுள்ளார்.
ஒதுக்கீடு தொடர்பான விஷயங்களை உறுப்பு நாடுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் நிலவும் குறைகளைக் களைந்து சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதானது வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக அமையும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
ஒதுக்கீடு குறித்த சீர்திருத்தம் செயல்படுத்தப்படாதது ஜி 20 மாநாடு தோல்வியடைந்ததை வெளிப்படையாகக் காட்டுவதாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரும் பொருளாதார கூட்டமைப்பாகக் கருதப்படும் ஜி20 மாநாட்டில் எவ்வித தீர்மானமும் எட்டப் படவில்லை என்றால், அது இந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்றும் அர்விந்த் மாயாராம் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒதுக்கீடு தொடர்பாக 14-வது பொது மதிப்பீடு சீர்திருத்தம் ஜனவரி 2014-க்குள் அமல்படுத்தப்படும் என்று 2010-ம் ஆண்டிலேயே சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப் பட்டால் சர்வதேச செலாவணி நிதியத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2.44 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதமாக உயரும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்விதம் உயர்த்தப்பட்டால் ஐஎம்எஃப்-பில் அதிக பங்களிப்பு கொண்ட நாடுகள் வரிசையில் 8-வது இடத்தை இந்தியா பிடிக்கும். இப்போது இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.
சிட்னியில் பிற நாடுகளின் மத்திய வங்கி துணை அதிகாரிகளை சந்தித்தித்துப் பேசிய அர்விந்த் மாயாராம், ஜி20 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம் இதுவரையில் நிறைவேற்றப் படாதது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சீர்திருத்தத்தை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம்தான் ஐஎம்எஃப் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். மேலும் இது அமலாக்கப்படுவதன் மூலம்தான் ஐஎம்எஃப்பின் திறமையான செயல்பாடு வெளி உலகுக்குத் தெரிய வரும். ஜனவரி 2014க்குள் செயல்படுத்த வேண்டிய ஒப்புக் கொள்ளப்பட்ட சீர்திருத்தம் இதுவரை அமல்படுத்தப்படாதது ஐஎம்எஃப் செயல்பாட்டை சந்தேகிக்க வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்நாட்டு ரிசர்வ் வங்கிகளின் கவர்னர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் சனிக்கிழமை சிட்னியில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஐஎம்எஃப்-பில் நாடுகளுக்கான ஒதுக்கீட்டுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டனர். ஜி20 மாநாட்டில் போடப்பட்ட தீர்மானத்தை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் இதைச் செயல்படுத்துவது நின்றுபோயுள்ளது.
ஒதுக்கீடு சீர்திருத்தத்தை ஐஎம்எஃப் செயல்படுத்தாததினால் இந்த விஷயத்தில் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது என்று குறிப்பிட்ட மாயாராம், இதன் காரணமாக 15-வது பொதுக்குழு தீர்மானத்தை செயல்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒதுக்கீடு அமல்படுத்தப் படாததால் ஐஎம்எஃப் வகுத் துள்ள புதிய கடன்வாங்கும் ஒப்பந்தத்தை ஏற்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் இதை ஆதரிப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் சிரமம் என்று அவர் குறிப்பிட்டார்.
14-வது மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதைச் செயல்படுத்த வேண்டியது உறுப்பு நாடுகள் அனைத்தின் பொறுப்பாகும். இதன்மூலம்தான் அடுத்த கட்ட மாநாட்டு தீர்மானத்தைச் செயல்படுத்த இயலும் என்றும் மாயாராம் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏப்ரல் 2014-ல் நடைபெற உள்ள அடுத்த கட்ட கூட்டத்தில் முந்தைய தீர்மானத்தை நிறைவேற்றும்படி இந்தியா வலியுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஆகும் கால தாமதத்தைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
15-வது மாநாட்டு தீர்மா னத்தை ஜனவரி 2015-க்குள் அமல்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஐஎம்எஃப் ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ஐஎம்எஃப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.