

இந்தியாவில் மிகப் பெரிய ஜவுளி துறை கண்காட்சியை மத்திய அரசு நடத்த உள்ளது. காந்திநகரில் ஜூன் 30ம் தேதி நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த துறை சந்தித்து வரும் சவால்களை தெரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற டெக்ஸ்டைல் இந்தியா கருத்தரங்கில் பேசிய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது,
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்பட பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜவுளி துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் சர்வதேச அளவிலான உற்பத்தியாளர் களோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளவும், கூட்டு வைக்கவும் இந்த கண்காட்சி வழி ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் 25 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம், ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள் உடன் இணைந்து செயல்படுகின்றன. மஹாராஷ்டிர முதல்வர் தேவேந் திர பட்னவி்ஸ், கோவா முதலமைச் சர் மனோகர் பாரிக்கர் உள் ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் மிக அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறைகளுள் ஒன்றான ஜவுளி துறையை அங்கீகரிக்கும் விதமாக இந்த கண்காட்சி இருக்கும். டெக்ஸ்டைல் இந்தியா 2017 கண்காட்சி இந்திய ஜவுளி துறையை மேம்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜவுளி துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பது, வளரும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வது, கைவினைப் பொருட்களுக்கான சந்தையை தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இந்த கண்காட்சியின் நோக்கமாக இருக்கும். இந்திய ஜவுளி துறைக்கு உள்ள சவால்கள், திறன் தேவைகள் ஆகியவை இந்த கண்காட்சியின் மூலம் மேம்படும்.
உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 2,500 கொள்முதலாளர்கள், 1,000த்தும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்து கொள் வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.