

நாட்டின் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, அதிக வட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தொழில்துறை வளர்ச்சி தேக்கம் கண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையும் இதற்குத் தப்பவில்லை. ரியல் எஸ்டேட் துறையில் தற்போது தனியார் முதலீடு அதிகரித்திருப்பதால் இத்துறை புத்துயிர் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் பல நிறுவனங்களின் கட்டுமானத் திட்டங்கள், போதிய நிதி வசதி இல்லாமல் முடங்கின. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால், பல கட்டுமான நிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனையும் குறைந்தது. சென்னையில் மட்டும் சுமார் 48 ஆயிரம் வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாக ரியல் எஸ்டேட் அமைப்பான கிரெடாய் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பல காரணங்களால், கட்டுமான நிறுவனங்களின் கடன் சுமை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில், முன்னணியில் உள்ள 8 ரியல் எஸ்டேட் நிறுவனங்களின், ஒட்டு மொத்த நிகர கடன், 36,977 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதிச் சுமையைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள், குடியிருப்புகளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அவற்றின் விலையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய முன் வந்துள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ரியல் எஸ்டேட் துறையில், தனியார் நிறுவனங்களின் பங்கு முதலீடு, 188 கோடி டாலராக (11,687 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு 123 கோடி டாலராக (7,657 கோடி ரூபாய்) இருந்தது.
ரியல் எஸ்டேட் துறையின் சுணக்கத்தால், வங்கிக் கடன் வசதியை பெற முடியாமல் தவிக்கும் பல கட்டுமான நிறுவனங்களுக்கு, கைகொடுக்க, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பது இத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், கட்டுமான நிறுவனங்கள் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. புதிய அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி இந்த ஆண்டு கணிக்கப்படலாம். 2013ஆம் ஆண்டில் தள்ளாட்டத்தில் இருந்த இந்திய ரியல் எஸ்டேட் துறை, புத்துயிர் பெறுமா என்பது போகப் போகத் தெரிய வரும்.