

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியின் சம்பள உயர்வுக்கு எதிராக நிறுவனர் என். ஆர். நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வர்த்தகம் தொடங்கியதும் இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள யு.பி.பிரவீண் ராவ் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இந்த விவகாரத்தால் இயக்குநர் குழுவுக்கும் நிறுவனருக்கும் மீண்டும் புதிய மோதல் உருவாகியுள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர் குழு பிரவீண் ராவின் சம்பள உயர்வுக்கு முறையான அனுமதி அளித்துள்ளதா என ஞாயிற்றுக் கிழமை நாராயணமூர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். ஊழியர்கள் நிர்வாகத்தின் மீதும் இயக்குநர் குழு மீதும் கொண்டுள்ள நம்பிக்கை, உண்மைத் தன்மையை அரிப்பதுபோலாகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரவீண் ராவுக்கு செயல்பட்டுக்கேற்ற சம்பளம் அதிகரிப்பு என்கிற முடிவால் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் எதிர்வினைகள் ஏற்படும். இது இயக்குநர் குழு மற்றும் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்று கூறியிருந்தார்.
பிரவீண் ராவின் சம்பள உயர்வுக்காக இயக்குநர் குழு கூட்டத்தில் 67 சதவீதம்பேர் ஆதரவு அளித்திருந்தனர். 33 சதவீதம் பேர் எதிராக வாக்களித்தனர். இந்த சம்பள உயர்வுக்கு 24 சதவீத பங்குதாரர்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். இதரவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு 1.32 சதவீதம் சரிந்தது. சந்தை நேர முடிவில் ரூ.13.45 சரிந்து ரூ.1,008.80க்கு வர்த்தகமானது.
முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் கருத்து:
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன், இத்தகைய முடிவை எடுத்துள்ள எந்த தலைமையும் மோசமானதுதான என்று குறிப்பிட்டார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் ஊதியம் பெறுவதும், கீழ்நிலை பணியாளர்கள் தங்கள் ஊதியத்தை தியாகம் செய்வதும் நிறுவனத்துக்கு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.