

இந்திய பங்குச்சந்தையில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.12,600 கோடி அந்நிய முதலீடு பங்குச்சந்தைக்கு வந்துள்ளது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் மாநிலங்களவையில் ஜிஎஸ்டி நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகி இருப்பது ஆகிய காரணங்களால் அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது.
தவிர கடந்த ஜூலையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,485 கோடி இந்திய கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். நீண்ட கால மாக கிடப்பில் இருக்கும் ஜிஎஸ்டி மசோதா நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவடைகிறது. பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் செய்யப் பட்டுள்ள மொத்த அந்நிய முதலீடு ரூ.19,457 கோடி ஆகும். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நிகர முதலீடு உயர்ந்திருப்பது ஜூலை யில்தான். கடந்த மார்ச் மாதத்தில் ரூ.21,143 கோடி முதலீடு வந்தது.
இந்த ஆண்டில் பங்குச் சந்தைக்கு ரூ.31,778 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. அதேபோல கடன் சந்தையில் இருந்து ரூ.4,723 கோடி வெளியேறியுள்ளது.
இந்த வாரம் இரண்டு ஐபிஓ வெளியீடு
இந்த வாரம் இரண்டு பொதுப்பங்கு வெளியீடுகள் வர இருக்கின்றன. திலீப் பில்ட்கான் மற்றும் எஸ்பி அப்பேரல்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஐபிஓ வெளியாகிறது. இந்த இரு நிறுவனங்களும் சுமார் ரூ.1,100 கோடி திரட்ட இருக்கின்றன.
திலீப் பில்ட்கான் ஐபிஓ இன்று தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல எஸ்பி அப்பேரல்ஸ் ஐபிஓ நாளை தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது. இந்த இரண்டு பங்குகளும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய சந்தையில் வர்த்தகமாகும்.
திலிப் பில்ட்கான் ஒரு பங்கு விலையாக ரூ.214-219 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அதிக பட்ச விலைக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.654 கோடி திரட்ட வாய்ப் புள்ளது.
எஸ்பி அப்பேரல்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.258-268 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச விலைக்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.456 கோடி திரட்ட வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 14 ஐபிஓ-க்கள் வெளியாகி உள்ளன.