தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கள நிலவரத்தை புரிந்து கொள்வதில்லை: பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் குற்றச்சாட்டு

தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கள நிலவரத்தை புரிந்து கொள்வதில்லை: பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கள நிலவரத்தை புரிந்துகொள்ளவில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளார் சக்திகாந்த தாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் பலமாக இருந்தாலும் கூட, மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் குறியீட்டினை உயர்த்த மறுக்கின்றன என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ஜப்பான் யோகஹோமாவில் நடைபெற்ற ஆசிய மேம்பாட்டு வங்கியின் 50-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

மத்திய அரசு நாட்டின் நலனுக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. சீர்திருத்தங்கள், முதலீட்டை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை, வேலை வாய்ப்பை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத சீர்திருத்தங்களை மத்திய அரசு எடுத்தது. இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கு சாதகமானவர்களின் பட்டியலிலும் இந்தியா முன்னேறி வருகிறது.

இருந்தாலும் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மதிப்பீட்டை உயர்த்தவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் எந்த மதிப்பெண்ணும் வழங்கவில்லை. அவர்கள் கள நிலவரத்தில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கருத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என நினைப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் கடந்த வாரம் இந்தியாவின் தர மதிப்பீட்டில் எந்த விதமான மாற்றமும் செய்யப்போவதில்லை என அறிவித்தது. பிட்ச் இந்தியாவுக்கு பிபிபி- தர மதிப்பீட்டினை வழங்கி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலையிலேயே இந்தியாவை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது.

தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மீது கடந்த சில மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எஸ் அண்டு பி நிறுவனம் சீனாவுக்கு ஏஏ- குறியீட்டினை வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த நாட்டின் ஜிடிபியை விட கடன் 264 (2016) சதவீதம் அதிகம். கடந்த 2009-ம் ஆண்டு 193 சதவீதம் என்னும் நிலையிலே இருந்தது. மாறாக இந்தியாவின் கடன் ஜிடிபியில் 72 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக சரிந்திருக்கிறது. மேலும் சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயர்ந்து வந்தாலும், இந்தியாவுக்கான தரமதிப்பீட்டை மதிப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in