

இந்தியாவின் முக்கியமான நிர்வாக கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத் இயக்குநர் குழு தலைவர் பதவியை ஏ.எம்.நாயக் ராஜிநாமா செய்திருக்கிறார். கடந்த வியாழன் அன்று இந்த முடிவை அவர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஐஐஎம் அகமதாபாத் தலைவராக இவர் இருக்கிறார். இந்த முடிவை எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். கடந்த ஆறு மாதங்களாக இது குறித்து சிந்தித்து வந்தேன். எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலைகள் இருப்பதால் ஐஐஎம்-ல் கவனம் செலுத்த முடியவில்லை. என்னுடைய வேலைப் பளுவின் காரணமாக தலைவர் பதவியை ராஜிநாமா செய்தேன். இதற்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்று நாயக் தெரிவித்தார்.
மேலும், தலைவர் பதவியில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று நினைக்கிறேன். தற்போதைய இயக்குநர் ஆஷிஷ் நந்தாவை ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டுவந்தேன். இன்னொரு ஹார்வேர்டு பேராசிரியர் காந்த் தாதரை இயக்குநர் குழுவில் கொண்டுவந்தேன் என்றும் நாயக் கூறினார்.
2012-ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தின் தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம் இவரது பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு வரை இவரது பதவி காலம் இருக்கும் சூழ்நிலையில் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். தனது ராஜிநாமா கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு அனுப்பி இருக்கிறார். இவர் பொறுப்பில் இருந்த சமயத்தில் இயக்குநர் குழுவின் எண்ணிக்கை 25லிருந்து 15 ஆக குறைக்கப்பட்டது. தவிர மத்திய அரசு கொண்டு வந்த ஐஐஎம் மசோதாவை கடுமையாக எதிர்த்தவர் நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.