

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடலாம் என கடன் வசூல் தீர்ப்பாயம் (டிஆர்டி) உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா நடத்தி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகள் ரூ.6,203 கோடியைக் கடனாக அளித்துள்ளன.
இந்த நிலையில் கடன் வசூல் தீர்ப்பாயத்தின் செயல் அலுவலர் கே.ஸ்ரீனிவாசன் 6,203 கோடி ரூபாய்க்கு 11.5 சதவீத வட்டியுடன் வசூல் செய்வதற்கான நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடலாம் என தெரிவித்தார். இதனால் மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட வங்கிகள் தீர்பாயத்தில் வழக்கு தொடுத்தன. விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும் மற்றும் அவரது பாஸ்போர்டை முடக்க வேண்டும் என்றும் எஸ்பிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறி தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார்.