

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதற்கான கருத்துக் கணிப்பு இன்னும் இரண்டு நாளில் நடைபெற உள்ளது. பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது என்று உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளாக விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக பிரெக்ஸிட் உள்ளது என்று உலக வங்கி இயக்குநர் அய்ஹன் கோஸே தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இதனால் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை வரையறுத்துக் கூற மறுத்த கோஸே, நடந்து வரும் விஷயங்களை உலக வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்கவில்லை என்று அவர் கூறினார்.
சர்வதே பொருளாதார எதிர்காலம் தொடர்பாக இம்மாதத் தொடக்கத்தில் உலக வங்கி தனது அரையாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்றாக பிரெக்ஸிட் உள்ளது என்று தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதால் பிரிட்டனின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீத சரிவு இரண்டு ஆண்டுகளில் ஏற்படும் என்றும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிடிபியில் 9.5 சதவீத அளவுக்கு சரிவு இருக்கும் என்று கணித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் ஜிடிபி-யில் பிரிட்டனின் பங்களிப்பு 15 சதவீதமாகவும், நிதிச் சேவை நடவடிக்கை பங்களிப்பு 25 சதவீதமாகவும், பங்குச் சந்தை பங்களிப்பு 30 சதவீதமாகவும் உள்ளது.
ஐரோப்பிய யூனியன் மிகவும் முக்கிமயான ஏற்றுமதி சந்தையாக திகழ்கிறது. அத்துடன் அந்நிய நேரடி முதலீடுகளை பல வளரும் நாடுகளில் மேற்கொள்கிறது.
சர்வதேச அளவிலான வர்த்தகம் மற்றும் நிதிச் சேவை பரிமாற்றம் குறிப்பாக ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, சஹாரா ஆப்பிரிக்கா, ஓஇசிடி மற்றும் உலக வங்கி மூலமாக நடக்கிறது.
நிதிச் சந்தையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
பிரெக்ஸிட் பிரச்சினையால் உருவெடுக்கும் பொருளா தார விளைவுகளைத் தாக்குப்பிடிக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது.
நிதிச் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலையை சமாளிக்க குறைந்தபட்சம் இரண்டு மூன்று தினங்களுக்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகளைவிட பிரிட்டனில் இந்தியா அதிக அளவு முதலீடு செய்துள்ளது. அதேபோல பிரிட்டனிலிருந்து அதிக நேரடி அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தக உறவுகள் பட்டியலில் 12-வது இடத்தில் பிரிட்டன் உள்ளது. இரு நாடுகளிடையிலான வர்த்தக பரிவர்த்தனை 1,402 கோடி டாலாராகும். இதில் 883 கோடி டாலர் ஏற்றுமதி, 519 கோடி டாலர் இறக்குமதியாகும். 2000-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2015 செப்டம்பர்வரையான காலத்தில் பிரிட்டன் இந்தியாவில் செய்துள்ள முதலீடு 2,256 கோடி டாலராகும். பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டன் இந்திய முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் நாடாகத் திகழ்கிறது.
ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறினால் அது அந்நாட்டு கரன்சியான பவுண்ட் மதிப்பை பாதிக்கும். இது இந்திய வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என்று அசோசேம் குறிப்பிட்டுள்ளது.