Last Updated : 26 Aug, 2016 11:11 AM

 

Published : 26 Aug 2016 11:11 AM
Last Updated : 26 Aug 2016 11:11 AM

ரயில் நிலையங்களில் வை-பை வசதி: பேஸ்புக் நிறுவனத்துடன் ரயில்டெல் பேச்சுவார்த்தை

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தித் தருவதற்கு சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்துடன் இந்திய ரயில்வே ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் வை-பை சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வேயின் தகவல் தொடர்பு நிறுவனமான ரயில்டெல்லின் தலைவர் ஆர்.கே.பார்கவா இது குறித்து குறிப்பிடும்போது பேஸ்புக் நிறுவனத்துடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம். பேஸ்புக்கின் இந்த வை-பை வசதி ரயில் நிலையங்களில் மட்டுமல்லாமல் அருகிலுள்ள கிராமங்களிலும் வை-பை இணைப்பு கிடைக்கும் வகையில் இருக்கும். பேஸ்புக் இந்தியா நிறுவனம் இந்த முயற்சிக்காக எங்களைத் தொடர்பு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ரயில் நிலையங்களில் இணையதள வசதியை கொடுக்கும் எங்களது திட்டத்துக்கு இந்த இணைப்பு கூடுதலான வசதியாக இருக்கும் என்றும் கூறினார். இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பேஸ்புக் மறுத்துள்ளது.

ரயில்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 4,000 ரயில் நிலையங்களில் ஆப்டிக் பைபர் அடிப்படையிலான தகவல் தொடர்பை வைத்துள்ளது.

ஏற்கெனவே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்களில் வை-பை வசதியை அளிப்பதற்கு ரயில்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதியை அளிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 21 ரயில் நிலையங்களில் உள்ள இந்த இலவச வை-பை வசதியை மாதத்துக்கு 20 லட்சம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்கின் இந்த முயற்சி ரயில் நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இணைப்பு கிடைக்கச் செய்யும் வகையில் இருக்கும். அடுத்த கட்டமாக 25 கிமீ சுற்றளவில் கிடைக்கச் செய்யும் வகையில் கூடுதலாக வை-பை மையங்கள் உருவாக்கப்படும் என்று பார்கவா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x