

வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளும் சில நிகழ்வுகளும் ஒருவருடைய மரியாதையை கூட்டும் அல்லது குறைக்கும். ஒருவர் மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய பாதிப்புகளை நினைத்து வருந்தக் கூடாது. நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்ற எண்ணம் நம் செயல்களின் வெளிப்பாடுகளில் இருக்க வேண்டும். சந்தோஷம் என்பது வலிகள் குறைந்து மகிழ்ச்சி மிகுந்து இருப்பது ஆகும். சந்தோஷம் என்பது ஒரு நிலை அந்த நிலையில் மகிழ்ச்சியை பிடித்துக் கொண்டு இருந்தால் நம்பிக்கை வளரும், தோல்வியில் துவண்டு போக மாட்டார்கள்.
தன்னைப் பற்றிய மதிப்பீடுகளும் தன்னுடைய சந்தோஷங்களும் சுற்றி இருக்கும் நிகழ்வுகளால் ஏற்படுகிறதே அன்றி தனியாக நிகழ வாய்ப்பு இல்லை. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய சந்தோஷத்தை தீர்மானிக்கிறது. தனிமனிதனுக்கும் சுற்று சூழலுக்கும் இடையில் உள்ள தொடர்பு எந்த அளவிற்கு வலிமையாக உள்ளதோ அந்த அளவிற்கு தனிமனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். புராணங்களும், இதிகாசங்களும், நன்னெறி நூல்களும் வெகுவாரியான விளக்கங்களை கூறி தொடர்பை பலப்படுத்தி இருப்பார்கள். அந்த மனிதன் மற்றும் சூழ்நிலையின் தொடர்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கு பல்வேறு காரணிகளை கூறியிருப்பார்கள். நதீன் பிராண்டென் என்ற நூலாசிரியர் சுயமரியாதைக்கான ஆறு தூண்கள் என்ற புத்தகத்தில் ஆறு காரணிகளை அழகாகவும், தெளிவாகவும் தொடர்பு உடையதாகவும் நிறுவிக் காட்டுகிறார். சுய மரியாதை என்பது யார் ஒருவரும் தானே ஏற்படுத்திக் கொள்வது அல்ல. மாறாக நாம் என்ன செய்கிறோம் எப்படி பழகுகிறோம் எப்படி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம் என்ற இவைகளின் ஓட்டு மொத்த வெளிப்பாடு ஆகும்.
ஆறு பழக்கவழக்கங்களை கீழ்வருமாறு காணலாம்
1. நிகழ்காலத்தில் வாழ்தல்
2. தன்னை உணர்ந்து அறிந்து கொள்ளுதல்
3. அனுபவங்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல்
4. தன்னை நிறுவி காட்டுதல்
5. அர்த்தமுள்ள தேவையுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல்
6. நேர்மையை வசமாக்கி கொள்ளுதல்
ஒரு தேர்ந்த உளவியலாளராக பணியாற்றி தன்னுடைய கருத்துகளை மனித மனங்களில் ஏர்பிடித்து உழுது பார்த்ததன் விளைவுதான் இந்தப் புத்தகம். சில பயிற்சிகளும் பரிசோத னைகளும் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய மனித சக்தியோ அதற்கும் அப்பாற் பட்ட சக்திகளோ எதையும் நிர்ணயிக்கவும் தீர்மானிக்கவும் முடியாது. நாம் எவ்வாறு ஆறு தூண்களையும் நிறுவி சுயமரியாதையை வளர்த்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த தூண்களை உபயோகித்து அழகான கட்டிடம் கட்டிய அநேக நபர்களை பற்றி நூலாசிரியர் விளக்கமாக கூறுகிறார்.
நிகழ்காலத்தில் வாழ்தல்
பெரும்பாலானவர்கள் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டும், எதிர்காலத்தில் நிகழக் கூடிய நிகழ்வுகளை பற்றி அதிசயத்துக் கொண்டும் நிகழ்கால நினைவுகளை தொலைத்து விடுகிறார்கள். நிகழ்காலத்தை தள்ளி வைத்து கனவு உலகில் செயல்பாடுகளை சாதித்துக் கொண்டிருப்பவர்கள் வெற்றி என்ற பொருளை உணரவே முடியாது. நிகழ்காலத்தில் எதிர்த்து நின்று துணிந்து எதிர்கொள்ளும் செயல் தன்னம்பிக்கையையும் வலிமையையும் மேம்படுத்தும். முதல் தூணை முழுமையாகப் பெற்றவர்கள் முன்னேற்ற பாதையில அடி எடுத்து வைக்கிறார்கள்.
தன்னை உணர்ந்து அறிந்து கொள்ளுதல்
குறைபாடுகளும் எதிர்மறை எண்ணங்களும் இல்லாத மனிதர்களே இல்லை. அவைகளை நாம் எந்த அளவிற்கு எதிர்கொண்டு முன்னேறுகிறோம் என்பதே முக்கியம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தகுதிகளையும் திறமைகளையும் வலிமைகளையும் பாதிப்பு களையும் உள்ள படி ஏற்றுக் கொள்வது இரண்டாவது தூண் பலமாக நிற்க உதவும். எப்போதும் தன்னை பற்றி குறைவாக மதிப்பீடு செய்பவர்கள் தன் சுய மரியாதையையும் வெற்றிக்கான வழிகளையும் தொலைத்துவிடுகிறார்கள். அதேபோல் தன்னை பற்றிய உயரிய மதிப்பீடு செய்பவர்கள் தன்னையே தொலைத்து விடுகிறார்கள். இந்த அலைகளில் சிக்கினாலும் யார் ஒருவர் தன்னை உணர்ந்து அறிந்துக் கொள்கிறார்களோ அவரே அலைகளின் பிடியில் இருந்து நீந்தி வெளிவர முடியும்.
அனுபவங்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளுதல்
இதுவரை நடந்தது முடியட்டும் இனி மேல் தொடங்கிக் தொடருவோம் என்ற எண்ணம் வரும் பொழுது நம்முடைய அனுபவங்கள் நமக்கு ஒரு பாடமாக மட்டும் இல்லாமல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் வழங்குகின்றன. தன் மதிப்பீடும் தன்னை பற்றிய அளவு கோள்களும் மற்றவர்களுக்கு தெரியும் பொழுது ஏற்படும் இணைப்பு பிடிப்பை ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் தனித்த போட்டியாளராக யாருமே இல்லாத களத்தில் தற்பெருமை பேசி அதகளம் செய்து கொண்டிருப்பவர்கள் மூன்றாவது தூணுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். அனுபவங்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளுவது என்பது விளம்பர அட்டைகள் வைப்பது போல் அல்ல மாறாக மனதில் தோன்றும் ரசாயன சேர்க்கை ஆகும்.
தன்னை நிறுவி காட்டுதல்
எண்ணம், உணர்வு, நம்பிக்கை, தேவை இவைகளை யார் ஒருவர் மதிப்பளித்து மற்றவர் களிடம் உரையாடுகிறார்களோ அவர்களுக்கு மற்றவர்களும் மதிப்பு அளிப்பார்கள். தம்மை பற்றி மரியாதையே இல்லாமல் எண்ணம், உணர்வு, நம்பிக்கை, தேவை ஆகியவைகளை யார் ஒருவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறாரோ அவர் நான்காவது தூணை நெருங்க முடியாது. உறுதிபட்ட எண்ணம், செயல், நம்பிக்கை தேவைகள் ஆகியவைகளை கூர்த்தீட்டி மற்றவர்களோடு இணைத்துக்கொள்ளும் பொழுது நான்காவது தூண் வலுப்படும்.
அர்த்தமுள்ள, தேவையுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல்
தனக்கு தானே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டு மேலதிக செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அடுத்த அடிக்கு எடுத்து செல்லும். காரண காரியங்கள் இல்லாத கானல் நீரான இலக்குகள் வாழ்வின் அர்த்தத்தை புரட்டி போடும். முடிக்க இயலாத இலக்குகள் தேவைகளை தீர்க்கும். ஆனால் நெறிமுறைகளை மாற்றும். யார் ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுகிறாரோ அவர் தம் வாழ்க்கையை சரி சமமாக ஆய்ந்து தேவைகளை ஏற்று தேவையில்லாதவைகளை தவிர்த்து முன்னேற்ற படிகளில் செல்ல முடியும். அவ்வாறு செல்பவர்களுக்கு ஐந்தாவது தூண் வசப்படும்.
நேர்மையை வசமாக்கி கொள்ளுதல்
அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்றோ என்ன செய்கிறார்கள் என்றோ பார்த்து அவர்களுக்கு போட்டியாக, நேர்மைக்கு மாறாக செய்யக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டும். தன்னுடைய குறிக்கோளையும், அடைய வேண்டிய இலக்குகளையும் நிதானித்து நேர்மையான வழியில் செல்பவர்கள் வெற்றிக்கு மிக அருகில் செல்லலாம். நேர்மைக்கு முரணான வெற்றிகள் தேவையில்லை என்று நினைப்பவர்கள் முதலில் விழுந்தாலும் முடிவில் எழுந்து நிற்பார்கள். நேர்மை முறையற்ற வர்களுக்கு எட்டா கனி. முறைகேடுகளை விரும்புவோர்களுக்கு புதைக்குழி. நேர்மையை வசப்படுத்திக் கொள்பவர்கள் ஆறாவது தூணை ஆணியடித்து நேராக நிற்க வைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளு வார்கள்.
ஆறு தூண்களையும் ஆழ நட்டு அளவாய் நிறுத்தி வெற்றி என்னும் கூரை வேய்வது சிறப்பான செயல். இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகளை படிக்கும் பொழுது நீதி போதனை போல் தோன்றினாலும் உளவியல் கோட்பாடுகள் பெரும்பான்மையும் அந்த போதனைகளில் இருந்து பெறபடுவதால் வெற்றிக்கு உத்திரவாதம் கொடுக்கும். வெற்றி மகிழ்ச்சியை மலரச் செய்யும். சுயமரியாதையை வளர்த்துக் கொண்டு தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ள நினைப்பவர்களுக்கும் மற்றவர்களோடு தங்களை எளிதில் இணைத்துக் கொள்பவர் களுக்கும் இந்த ஆறு தூண்களும் அவசியம்.
தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com